மெரினா கடற்கரையில் கன்னியாகுமரி ஆசிரியையிடம் கார் திருட்டு: வாலிபருக்கு வலைவீச்சு

திருடுபோன கார்.
திருடுபோன கார்.மெரினா கடற்கரையில் கன்னியாகுமரி ஆசிரியையிடம் கார் திருட்டு: வாலிபருக்கு வலைவீச்சு

சென்னை மாநகராட்சி ஊழியர் போல நடித்து கன்னியாகுமரி ஆசிரியையிடம் காரைத் திருடிச் சென்ற வாலிபரைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், பெரியவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரா தங்கஜோதி(37). இவர் கன்னியாகுமரி மகாராஜபுரத்தில் ஊரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி ஆசிரியை சுமித்ரா தனது குடும்பத்துடன் சென்னை செங்குன்றம் பகுதியில் வசிக்கும் அவரது மாமா செல்வகுமாரைப் பார்க்க காரில் வந்துள்ளார்.

மேலும் சுமித்ரா தனது காரை சென்னையில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகைக்கு வீடுவதற்காக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுமித்ரா மெரினா கடற்கரையைச் சுற்றிப் பார்க்க காரில் நேற்று வந்துள்ளார். அப்போது உழைப்பாளர் சிலை அருகே கார் பார்க்கிங்கில் நின்றிருந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர், ஆசிரியை சுமித்ராவிடம் தான் மாநகராட்சி ஊழியர் என்றும், இங்கு காரை பார்க்கிங்கில் வரிசைபடுத்தும் வேலை செய்து வருவதாக கூறி கார் சாவியை வாங்கியுள்ளார்.

மேலும் 'இங்கேயே தான் இருப்பேன், நீங்கள் பீச்சைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்து என்னிடம் கார் சாவியை வாங்கிக் கொள்ளுங்கள்' என்று தெரிவித்துள்ளார்.இதனை நம்பி சுமித்ரா அவரிடம் கார் சாவியைக் கொடுத்து விட்டு பீச்சைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். இதன் பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அவரது கார் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதன் பின்னர் தான், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுமித்ரா, இதுகுறித்து அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாநகராட்சி ஊழியர் போல் நடித்து காரைத் திருடி சென்ற நபரை தேடிவருகின்றனர். மாநகராட்சி ஊழியர் என்று கூறி ஆசிரியையிடம் வாலிபர் காரைத் திருடிச்சென்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in