`கனியாமூர் பள்ளி நிர்வாகிகளை ஏன் கைது செய்துள்ளீர்கள்?’- சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

`கனியாமூர் பள்ளி நிர்வாகிகளை ஏன் கைது செய்துள்ளீர்கள்?’- சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

கனியாமூர் மாணவி மரண வழக்கில், தனியார் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் எதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அவர்களைக் கைது செய்ததற்கான காரணத்தை நாளை மறுதினம் தெரிவிக்காவிட்டால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த வழக்கில் சிறையில் இருக்கும் பள்ளி தாளாளர், முதல்வர், செயலாளர், இரண்டு ஆசிரியர்கள் ஆகியோர் தரப்பில் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘பள்ளி மாணவி மரணத்திற்கு தங்களுக்கும் தொடர்பில்லை. சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். அப்போது, தங்கள் மகள் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மாணவியின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் காவல்துறை தரப்பில் அவர்களின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சிபிசிஐடி தரப்பில் விளக்கம் கோரப்பட்டிருப்பதால் கால அவகாசம் வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ‘வழக்கு விசாரணைக்கு வருகிறது என முன்பே தெரிந்த நிலையில் அதற்கான ஆவணங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டாமா? இந்த வழக்கில் பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் என்ற காரணத்திற்காக மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறார்களா என்ற விவரத்தை வெள்ளிக் கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும்’ என நீதிபதிகள் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in