காங்கிரஸில் சேரும் கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி

கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச காங்கிரஸ் திட்டமா?
காங்கிரஸில் சேரும் கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி
கன்னையா குமார், ஜிக்னேஷ் மேவானி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமாரும், குஜராத் சுயேச்சை எம்எல்ஏ-வான ஜிக்னேஷ் மேவானியும் அடுத்த வாரம் காங்கிரஸ் கட்சியில் சேரவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

காங்கிரஸின் புது வியூகம்

குஜராத்தின் வட்காம் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ-வும், பட்டியலினச் சமூகத்தின் நம்பிக்கைக்குரிய தலைவருமான ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸ் கட்சியில் சேர்வது கவனம் குவித்திருக்கிறது. குஜராத் காங்கிரஸின் செயல் தலைவராக ஜிக்னேஷ் மேவானி நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

பஞ்சாப் மாநிலத்தின் முதல் பட்டியலினச் சமூக முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்றிருக்கும் நிலையில், ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சியில் சேர்வது அக்கட்சிக்குப் பலம் சேர்க்கும் என்றே கருதப்படுகிறது. பட்டியலினச் சமூகத்தினரின் வாக்குகளைக் குறிவைத்து காங்கிரஸ் காய் நகர்த்திவருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதும் நிலையில், இது முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர் முயற்சியா?

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவராக இருந்த கன்னையா குமார், 2018-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டில், தேசிய செயற்குழுவில் இடம்பெற்றார். பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த அவர், 2019 மக்களவைத் தேர்தலில் பேகுசராய் தொகுதியில் போடியிட்டுத் தோல்வியடைந்தார்.

கன்னையா குமார், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், காங்கிரஸில் சேர முடிவுசெய்திருப்பதாகவும், பிரசாந்த் கிஷோரின் முயற்சியால் ராகுல் காந்தியைச் சந்தித்ததாகவும் சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. எனினும், அதை கன்னையா குமார் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி பிறந்ததினமான அக்டோபர் 2-ம் தேதி இருவரும் காங்கிரஸில் இணையும் நிகழ்ச்சிக்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பகத் சிங் பிறந்ததினமான செப்டம்பர் 28-லேயே அந்நிகழ்ச்சி நடத்தப்படவிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.