விளைநிலங்களை அழித்து தஞ்சை கண்டியூர் சுற்றுச்சாலை: தடுத்து நிறுத்திய விவசாயிகள்

விளைநிலங்களை அழித்து  தஞ்சை கண்டியூர் சுற்றுச்சாலை: தடுத்து நிறுத்திய விவசாயிகள்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் கிராமத்தில் விளைநிலங்களை அழித்து போடப்பட்டுவரும் சுற்றுச் சாலையை விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

திருவையாறு அருகே கண்டியூர் கிராமத்தில் சுற்றுச்சாலை அமைக்கும் பணி கடந்த 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்கு  விவசாயிகளின் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் காவல் துறை ஒத்துழைப்புடன் சாகுபடி செய்யப்பட்டு பச்சை பசேல் என்று இருக்கும்  சம்பா பயிர்களை  அழித்து மண்  கொட்டப்பட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.  இதை  எதிர்த்து  தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் காவல்துறை மூலம் அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். 

இதையறிந்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பிஆர்.பாண்டியன் அப்பகுதிக்கு இன்று நேரில் சென்று விவசாயிகளுடன் இணைந்து சாலைப் பணிகளைத் தடுத்து நிறுத்தினார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் நேரில் வந்து  உடனடியாக வாகனங்களை வயல்வெளியில் இருந்து அப்புறப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்றோம். கடந்த ஆட்சி காலத்தில் அவசர கோலத்தில் டெண்டர் விடப்பட்டதாக கூறிய விவசாயிகள், தங்களின்  ஒப்புதல் இல்லாமல்,  எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்  நடவு செய்து பாதுகாத்து வருகிற 70 நாட்களைக் கடந்த  பயிர்களை மண்ணைக் கொட்டி அழிப்பதை அனுமதிக்க மாட்டோம்" என்று ஆட்சியரிடம் தெரிவித்தனர்.

இந்த சாலைப்பணி மேற்கொள்ளப்படும் பகுதி முழுமையும் புஞ்சை நிலப்பகுதியாகவும் வாழை, தென்னை, மா, வெற்றிலை, உள்ளிட்ட தோட்டக்கலைப்பயிர்கள் தீவிரமாக சாகுபடி செய்து வெளிநாடுகள் வரையிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  வளம் கொழிக்கும் பொன்  விளையும் இப்பகுதிகளை அழித்து சாலை போடுவதை எக்காரணத்தை முன்னிட்டு அனுமதிக்க மாட்டோம்.  45 மீட்டர் அகலத்தில் சாலைகளை அமைக்கிறபோது ஒட்டுமொத்த விவசாயமும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அனுமதிக்க முடியாது.  உடனடியாக பணிகளை தடுத்து நிறுத்தி மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்"  என்றார். 

மேலும் திருவையாறு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஒப்பந்தக்காரருக்கு ஆதரவாக விவசாயிகளை மிரட்டி அச்சுறுத்தி துன்புறுத்தி வருகிறார்.அவர் மீது உரிய துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்டிருக்கிற ஒப்பந்த நிறுவனம் வாகனம் மூலம் மண்ணைக் கொட்டி பயிரை அழிப்பதை சட்டவிரோதமாக மேற்கொண்டுள்ளது. இச்செயல் உயர், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானாகவும் தமிழக அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு முரணாகவும் உள்ளது. எனவே ஒப்பந்தக்காரர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதுகுறித்து முழு தகவல் தனக்கு வரப்பெற்றுள்ளதாக கூறிய மாவட்ட ஆட்சியர்,  உடனடியாக சாலைப் பணிகள்  நிறுத்தப்படுவதாகவும், விரைந்து விவசாயிகள் கருத்து அறிந்து வெளிப்படைத் தன்மையோடு கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படும். தமிழக அரசின் ஒப்புதலை பெற்று சாலை பணி துவங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்  என உத்தரவாதம் அளித்தார். 

அதனைத்தொடர்ந்து இன்றைக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.  அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போராட்டக் குழு சார்பில்  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விரைவில் வழக்கு தொடர உள்ளது. எந்த முகாந்திரமும் இல்லாமல் சாலை போடுவதை அனுமதித்தால் ஒட்டுமொத்த காவிரி டெல்டாவும் அழிவுப்பாதை நோக்கி செல்லும் என்பதை மாவட்ட ஆட்சியர் இடத்தில் எடுத்துரைக்கப்  பட்டுள்ளது" என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார் 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in