கஞ்சா விற்பனை, கட்டப் பஞ்சாயத்து: வாலிபரின் உயிரைப் பறித்த கூடா நட்பு


கஞ்சா விற்பனை, கட்டப் பஞ்சாயத்து: வாலிபரின் உயிரைப் பறித்த கூடா நட்பு

முன் பகை காரணமாக வாலிபர் ஒருவர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 42 வது வார்டுக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் வசிப்பவர் விஜய்(22). கட்டுமானத் தொழில் செய்து வரும் இவர், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களுடன் நட்பாகப் பழகிவந்தார். தன் தந்தையின் மறைவுக்குப் பிறகு நண்பர்களால் கஞ்சா போதைக்கு அடிமையானார். இதனால் கஞ்சா வியாபாரிகளுடன் சேர்ந்து அடிதடி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றுக்குச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படவே தனியாக வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலையிலிருந்து மகனின் நடமாட்டம் இல்லாததைக் கண்ட விஜயின் தாய், மகன் வசிக்கும் வீட்டின் கதவைத் திறந்து பார்த்துள்ளார். வீட்டின் உள்ளே ரத்த வெள்ளத்தில் விஜய் தலையில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்று அலறினார்.

அவரின் அலறலைக் கேட்டு விஜயின் சகோதரிகளும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களும் திரண்டனர். அப்பகுதி மக்கள் தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விஜயின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். கஞ்சா போதைக்கு அடிமையாகி அவ்வப்போது சண்டை, சச்சரவு, அடிதடி போன்றவற்றில் விஜய் ஈடுபட்டு வந்ததால், முன் விரோதம், கஞ்சா வியாபார பிரச்சினை காரணமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in