ஆந்திராவிலிருந்து ராமநாதபுரம் வந்த லாரி; செக்போஸ்ட்டில் 1,200 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் சிக்கினர்!

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு கடத்தி வந்த 1,200 கிலோ கஞ்சா பண்டல்களை ஆண்டிபட்டி அருகே போலீஸார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

தமிழக கடற்பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மர்மப்படகுகள் மூலம் கடத்த முயற்சிப்பதை மத்திய, மாநில பாதுகாப்பு பிரிவினர் கண்காணித்து வருகின்றனர். இவற்றில், ஒரு சில கடத்தல் சம்பவங்கள் மட்டுமே தடுக்கப்பட்டுள்ளது. போதை பொருட்களின் புழக்கத்தை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் போலீஸாருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து போலீஸ் உயரதிகாரிகள் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு தேனி வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக தென் மண்டல ஐஜி அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தேனி-மதுரை எல்லை போலீஸ் செக் போஸ்ட்டில் தனிப்படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அந்த வழியை விரைவாக கடக்க முயன்ற லாரியை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். அந்த லாரியில் உணவு பொருட்களுடன் கஞ்சா பண்டல் பதுங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த லாரியில் பயணித்த ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் (34) மற்றும் செல்வராஜ் (38), சின்னச்சாமி (36) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து, 1,200 கிலோ கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in