முதல்வர் ஸ்டாலினுடன் கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் சந்திப்பு: கண்ணீர் மல்க கோரிக்கை

முதல்வர் ஸ்டாலினுடன் கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் சந்திப்பு: கண்ணீர் மல்க கோரிக்கை

முதல்வர் ஸ்டாலினிடம் கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் சந்தித்துப் பேசினர். அப்போது, மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மரணமடைந்தார். இதுதொடர்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தப் புகாரின் பேரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை கைது செய்த போலீஸார், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முறையிடுவேன் என்று மாணவியின் தாயார் கூறியிருந்தார். அதன்படி, முதல்வரை சந்தித்து அவருக்கு அனுமதி கிடைத்தது. அவர் இன்று தனது கணவர், மகனுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, முதல்வரிடம், தனது மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மாணவியின் தாயார் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in