பள்ளி நிர்வாகத்திடம் பணம் வாங்கிக் கொண்டு அவதூறு பரப்பும் யூடியூப்பர்: கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் டிஜிபியிடம் புகார்

பள்ளி நிர்வாகத்திடம் பணம் வாங்கிக் கொண்டு அவதூறு பரப்பும் யூடியூப்பர்:  கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் டிஜிபியிடம்  புகார்

கள்ளக்குறிச்சி மாணவி குறித்தும் அவரது தாய் குறித்தும் அவதூறு பரப்பும் யூடியூப்பர் கார்த்திக் பிள்ளை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில், நீதிகேட்டு அவரது தாய் செல்வி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து வருகிறார். இந்நிலையில், மாணவியின் தாய் செல்வி, தந்தை ராமலிங்கம் ஆகியோர் சென்னை டிஜிபியை சந்தித்து ஒரு புகார் மனுவை இன்று அளித்தனர்.

அதில், " 'The K tv' எனும் பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் கார்த்திக் பிள்ளை என்பவர், தனது யூ ட்யூப் சேனலில் எங்களது மகள் குறித்தும், மாணவியின் தாய் குறித்தும் உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த நபர் தனது மகள் 9-வது படிக்கும் வரை இன்சியல் G என இருந்ததாகவும், பின்னர் தான் ராமலிங்கத்தை திருமணம் செய்து கொண்ட பிறகு மாணவியின் இன்சியல் R என போட்டுக் கொண்டதாக அவதூறு பரப்பி வருவதாக புகாரில் தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகத்திடம் இருந்து ஆதாயம் பெற்றுக் கொண்டு மாணவியின் தாயைப் பற்றி அபாண்டமாக பேசி வருவதுடன், மாணவியின் தந்தையை அவரது தாயே கொலை செய்திருக்கலாம் என்று பேசும் வீடியோவால் எங்களுக்கு மன உளைச்சலாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின் மாணவியின் தாய் செல்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், " என்னைப் பற்றியும்,எனது மகள் பற்றியும் அவதூறாக பேசிவரும் யூடியூப்பர் கார்த்திக் பிள்ளை அதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும். எனது மகள் குறித்து தவறாகப் பேசுவதுடன், அவர் எனது மகளே அல்ல என அவர் பேசி வருவது மனவேதனையை அளிக்கிறது. மேலும் , எனது மகள் இறப்பில் இன்னும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. பள்ளி நிர்வாகம் இதுவரை அந்த சந்தேகங்களைப் போக்கவில்லை, இதுநாள் வரை பள்ளியில் பதிவான சிசிடிவி காட்சிகளை எங்களிடம் காண்பிக்கவில்லை. இந்த மரணம் தொடர்பாக சிபிசிஐடி முதல் நாள் நடந்தது குறித்து விசாரித்து சென்றனர்.

அதன் பிறகு அவர்கள் விசாரிக்கவில்லை. பள்ளியில் உள்ள கைரேகை ஏற்கெனவே இருந்த வண்ணப் பூச்சு என்று கூறுகிறார்கள், ஆனால் அது உண்மையல்ல, அந்த பள்ளிக்கு பல முறை சென்றுள்ளேன், அங்கு அதுபோல் கைரேகை இருந்ததில்லை. எனது மகள் இறப்பிற்குப் பின்னரே அந்த கைரேகை வந்துள்ளது. எனவே, எனது மகள் மரணம் குறித்து சிபிசிஐடி தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றம் தெரிவித்த தகவல்களில் நம்பிக்கை இல்லை. எனவே, மேல்முறையீடு செய்ய உள்ளேன்" என்று அவர் கூறினார் அத்துடன் தன் மகளின் பிறப்பு, பள்ளிச் சான்றிதழ், தனது திருமணச்சான்றிதழ், திருமணப்பத்திரிகை, திருமணப்புகைப்படங்களின் ஆதாரங்களைச் செய்தியாளர்களிடம் மாணவியின் தாய் செல்வி காண்பித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in