பள்ளி நிர்வாகத்திடம் கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் பேரம் பேசினாரா?- வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு

பள்ளி நிர்வாகத்திடம் கள்ளக்குறிச்சி மாணவியின் தாய் பேரம் பேசினாரா?- வெளியான சிசிடிவி காட்சியால் பரபரப்பு

கனியாமூர் தனியார் பள்ளி நிர்வாகத்திடம்,  உயிரிழந்த மாணவியின் தாய் செல்வி பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியாகி இருக்கும்  சிசிடிவி கேமரா காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த ஜூலை மாதம் 13-ம் தேதி அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்தார்.  மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது தாய் செல்வி மற்றும் உறவினர்கள் மாணவியின் உடலை வாங்குவதற்கு மறுத்து  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  பள்ளி நிர்வாகம் தரப்பில் தங்களை அழைத்து பேச்சு நடத்தவில்லை என்று அப்போது மாணவியின் தாய் கூறியிருந்தார்.

அவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக சமூக வலைதளங்கள் மூலமாக தகவல் பரப்பப்பட்டு ஜூலை 17-ம் தேதி அன்று கனியாமூர் பள்ளியில் பெரும் கலவரம் வெடித்தது. பள்ளியின் வாகனங்கள்,  ஆவணங்கள் உள்ளிட்ட உடமைகள் அனைத்தும்  எரித்து நாசமாக்கப்பட்டன. காவல்துறை வாகனங்கள்,  தீயணைப்பு வாகனங்கள் , தனியார் வாகனங்கள்  இந்த கலவரத்தில் தீக்கிரையானது.

இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு மாணவி மரணம் குறித்த மர்மத்தை அவர்கள் விசாரித்து வருகின்றனர்.  கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு அவர்கள் இதுவரை 360க்கும் மேற்பட்டவர்களை  அடையாளம் கண்டு கைது செய்திருக்கின்றனர்.

பள்ளி நிர்வாகிகள் தான் மாணவியை கொலை செய்துவிட்டனர் என்று மாணவியின்  தாயார் தொடர்ந்து பள்ளியின் தரப்பை குறை கூறி வந்த நிலையில், மாணவி இறந்த நாளன்று  அவர் பள்ளி நிர்வாகத்திடம் பேரம் பேசியதாக  கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.  பள்ளி வளாகத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும்  அந்த காட்சிகளில் பள்ளி ஆடிட்டோரியத்தில் செல்வி உள்ளிட்டவர்கள் ஒருபுறமாகவும், பள்ளி நிர்வாகம் சார்பில் இன்னொரு புறமாகவும் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

பள்ளி தரப்பில் பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன்,  கள்ளக்குறிச்சி மகாபாரதி பள்ளியின் உரிமையாளர் மோகன் மற்றும் ரவிச்சந்திரனின்  உறவினர்கள் நான்கு பேர் பங்கேற்றுள்ளனர்.  அதேபோல செல்வியின் தரப்பில் செல்வி உட்பட  9 பேர் பங்கேற்றுள்ளனர். அந்த பேச்சுவார்த்தையில் மாணவியின் தாய்  தரப்பில் 20 லட்ச ரூபாய் கேட்கப்பட்டதாகவும், அதற்கு பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததுடன் எட்டு லட்ச ரூபாய் வரை தருவதற்கு முன் வந்ததாகவும் கூறப்படுகிறது.

பள்ளி நிர்வாகத்திடம் மாணவியின் தாய் பேரம் பேசியதாக சிசிடிவி காட்சிகளுடன் வெளியாகியிருக்கும் இந்த தகவல் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in