`மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு நடந்தே சென்று முதல்வரை சந்திப்பேன்'- கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் திடீர் அறிவிப்பு

`மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு நடந்தே சென்று முதல்வரை சந்திப்பேன்'- கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் திடீர் அறிவிப்பு

தனது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு தனது கிராமத்தில் இருந்து சென்னைக்கு நடந்தே சென்று தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்கப் போவதாக கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த மாதம் 13-ம் தேதியன்று மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு அவரது தாயார் செல்வி, தந்தை ராமலிங்கம் ஆகியோர் சட்டப்போராட்டம் உட்பட தொடர்ந்து பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியின் மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவியின் உடல் பிரேத பரிசோதனை மற்றும் மறு பிரேத பரிசோதனை அறிக்கைகளில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று மாணவியின் பெற்றோர் தெரிவித்ததையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ஜிப்மர் மருத்துவ குழுவினர் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஆய்வு செய்து அது குறித்த தங்களது அறிக்கையை நேற்று மாலை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வு அறிக்கை நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு மாணவியின் தாயார் செல்வி இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களை சந்தித்த மாணவியின் தாயார் செல்வி, "விழுப்புரம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்த மாணவிகள் யார் என்பதை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால்தான் அவர்கள் ஸ்ரீமதியின் தோழிகள் தானா? என்பது தெரியவரும். அப்படி தெரிவிக்கும் பட்சத்தில் அந்த மாணவிகள் யார் என்பதை நாங்கள் ரகசியமாக வைத்துக் கொள்வோம். மேலும் எங்கள் மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு வருகின்ற 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நெசலூர் கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்னை வரை நடந்தே சென்று சென்னையில் தமிழக முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in