காவல்துறையின் பிடியில் பெரிய நெசலூர்: கிராமமக்களின் கண்ணீர் அஞ்சலியோடு மாணவி உடல் அடக்கம்!

அமைச்சர் வெ. கணேசன் அஞ்சலி
அமைச்சர் வெ. கணேசன் அஞ்சலி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல் கடந்த 10 தினங்களுக்குப் பிறகு, இன்று முறைப்படியான சடங்குகளுடன் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியின் மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 13-ம் தேதி அன்று அவர் பள்ளி விடுதியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர்கள் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதனால் கடந்த 10 தினங்களாக அவரது உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று பல கட்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இன்று காலை மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொண்டனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பெரிய நெசலூருக்கு எடுத்துச் செல்லப்பட்ட மாணவியின் உடல் அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

உள்ளூர் மக்கள் மற்றும் உறவினர்கள் ஏராளமாக திரண்டு வந்து அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர் வெ.கணேசன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டவர்களும் போலீஸார் அனுமதியுடன் மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மாணவியின் குடும்ப வழக்கப்படி அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவியின் உடல் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. மாணவியின் தந்தை ராமலிங்கம் மகளுக்கான இறுதிச் சடங்குகளை செய்தார்.

இடுகாட்டில் மாணவியின் உடலுக்கு அமைச்சர் கணேசன் தலைமையில், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டவர்கள் மௌன அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாணவிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு மாணவியுடன் உடல் புதைக்கப்பட்டது.

நல்லடக்கம் செய்யப்படுவதை முன்னிட்டு 750-க்கும் மேற்பட்ட போலீஸார், மூன்று ஐஜிக்கள், அருகாமை மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in