கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: இரவில் சிபிசிஐடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: இரவில் சிபிசிஐடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக யாரேனும் புலன் விசாரணை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் காணொளி காட்சிகளை பதிவிடக் கூடாது என்றும் சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னம் சேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக நீதி கேட்டு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளியில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகளை எரித்ததோடு, பொருட்களை சூறையாடினர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் மாணவி மரணம் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாணவி மரணம் தொடர்பான வீடியோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி எச்சரித்துள்ளது. வீடியோக்களை வெளியிடுவது மாணவியின் மரணம் குறித்த புலனாய்வு விசாரணையின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்றும் இதனால் மாணவி மரணம் தொடர்பான வீடியோக்களை வெளியிட வேண்டாம் என்றும் மீறினால் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்படும் எனவும் நீதியை நிலைநாட்டுவதற்கும், நியாயமான புலன் விசாரணைக்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் தனி நபரோ அல்லது நிறுவனமோ இதுபோன்ற புலன் விசாரணையில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வழக்கு தொடர்பாக யாருக்கேனும் தகவல் கிடைத்தால் சிபிசிஐடி உயரதிகாரியின் செல்போன் எண்ணுக்கு (9003848126) தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் வழக்கின் புலன் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது என்றும் சிபிசிஐடி சுட்டிக்காட்டியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in