கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு: ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல்

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு: ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல்

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சிபிசிஐடி, ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி மாணவி மரணமடைந்த நிலையில், அதைத் தொடர்ந்து நடந்த வன்முறை தொடர்பான வழக்குகளின் விசாரணையை முறையாக நடத்தக்கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர், மாணவி பயன்படுத்திய செல்போன் ஜனவரி 20-ம் தேதி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஜிப்மர் மருத்துவ குழு நடத்திய பிரேத பரிசோதனையின் அறிக்கை தங்களுக்கு வழங்கப்படவில்லை என கூறினார்.

இதனையடுத்து விசாரணையின் தற்போதைய நிலை என்ன என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, விசாரணை நிலை குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட உரையில் அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் தாக்கல் செய்தார். மாணவி பயன்படுத்திய செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தடயவியல் துறையின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், மற்ற விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும் தெரிவித்தார். தடயவியல் துறை அறிக்கை கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறினார்.

இதனையடுத்து, ஜிப்மர் குழு பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கக்கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி மனுதாரர் ராமலிங்கத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in