கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்கக்கோரிய வழக்கு: அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்கக்கோரிய வழக்கு: அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால், மூடப்பட்ட பள்ளியைத் திறக்க அனுமதிக்க கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் மாணவியின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி உடைமைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் சூறையாடினர். இந்த கலவரத்தைத் தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது.

இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகளை அரசுத் துறைகளின் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்ததாகவும், அப்போது மாணவர்களுக்கான இருக்கைகள் சரியாக உள்ளனவா, சேதப்படுத்தப்பட்ட சிசிடிவி கேமரா மற்றும் பேருந்துகள் சரிசெய்யப்பட்டனவா முதலான கேள்விகள் எழுப்பியதாகவும் தங்கள் பதிலில் ஆய்வுக்குழு திருப்தி அடைந்ததாகவும் தெரிவித்தார். மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாகி வருவதால், பள்ளியை விரைவாகத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், ஆய்வு நடத்திய குழுவின் அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் எனவும் அறிக்கை கிடைத்த பின்னர் அதுகுறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அடுத்த விசாரணையின்போது அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.

இதை ஏற்று, அறிக்கையின் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in