கனியாமூர் கலவரத்தில் சேதமான பொருட்களின் மதிப்பு இத்தனை கோடியா?: அதிர்ச்சியூட்டும் சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை

கனியாமூர் கலவரத்தில் சேதமான பொருட்களின்  மதிப்பு இத்தனை கோடியா?: அதிர்ச்சியூட்டும் சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தின் போது ரூ 3,45,83,072 அளவுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் உள்ள சக்தி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி பள்ளி விடுதியில் தங்கியிருந்த நிலையில் கடந்த மாதம் 13-ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோரும், உறவினர்களும் குற்றம் சாட்டி போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப் போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் இணைந்து கொள்ள அது கடந்த மாதம் 17- ம் தேதியன்று பெரும் கலவரமாக வெடித்தது. பள்ளியில் கூடிய ஆயிரக்கணக்கானவர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி பள்ளியின் உடமைகள், ஆவணங்கள் அனைத்தையும் தீவைத்து எரித்தனர். காவல்துறை வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன காவலர்களும் தாக்கப்பட்டனர்.

இது மிகப்பெரிய விவகாரமாக வெடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழுவினரை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடியோ காட்சிகளின் வழியாகவும், செல்போன் சிக்னல்கள் மூலமாகவும் கண்டறியப்பட்டு தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 350 பேருக்கும் மேல் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்னொரு பக்கம் கலவரக்காரர்களால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்பதை கணக்கிடும் பணியை சிறப்பு விசாரணைக் குழுவினர் மேற்கொண்டு வந்தனர். அவர்கள் மூலம் சேத மதிப்பு முழுமையாக கணக்கிடப்பட்டு அது அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கலவரக்காரர்களால் பள்ளி, காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்டவற்றில் மொத்தமாக ஏற்பட்டுள்ள சேதம் 3,45,83,072 ரூபாய் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

அவற்றில் கலவரக்காரர்களால் முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டதும், தீ வைத்து எரிக்கப்பட்டதுமான பள்ளியின் பேருந்துகள், டிராக்டர், ஜேசிபி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட 51 வாகனங்கள் மற்றும் நான்கு காவல்துறை வாகனங்களின் மொத்த சேதம் 90,98,500 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கலவரக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ள கணினிகளின் மொத்த மதிப்பு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய், சேதப்படுத்தப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்புக்களின் மதிப்பு 5 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய், சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் அமைப்புகளின் சேதம் 35 லட்சம் ரூபாய். அடித்து நொறுக்கப்பட்ட கதவுகள் ஜன்னல்களின் மொத்த மதிப்பு 35,19,226 ரூபாய். அடித்து நொறுக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் மொத்த மதிப்பு 17 லட்சம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

அது தவிர மூன்று காவல்துறை வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சேதப்படுத்தப் பட்டுள்ள நிலையில் அவற்றின் மொத்த மதிப்பு சேத மதிப்பு 3.74,010 ரூபாய். பள்ளியில் உள்ள சோலார் வாட்டர் ஹீட்டர், மரங்கள், நெடுஞ்சாலையில் உள்ள விளம்பர பலகைகள், நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் இவற்றையும் கலவரக்காரர்கள் அடித்து நொறுக்கியிருந்தனர். அவற்றிற்கும் தனித்தனியாக எவ்வளவு சேதம் என்பது மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தையும் சேர்த்து மொத்தமாக சேதம் அடைந்துள்ள பொருட்களின் மதிப்பு ரூபாய் 3,45,83,072 என்று சிறப்பு விசாரணைக் குழுவினர் மதிப்பிட்டு அறிக்கை அளித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in