களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: 3 பேரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

களியக்காவிளை எஸ்எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: 3 பேரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான 3 குற்றவாளிகளை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதையடுத்து, சென்னையில் வைத்து அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக களியக்காவிளை காவல்துறையினர் மற்றும் க்பூ பிரிவு காவல்துறையினர் இருவேறு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அம்பத்தூர் இந்து முன்னணி பிரமுகர் கொலை மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்த்தது ஆகிய வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி பின் தலைமறைவான தீவிரவாதி காஜா மைதீன், நவாஸ், அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோர் இதன் பின்னணியில் இருப்பதும், தீவிரவாதிகளான அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோர் தமிழகத்தில் இருந்து கேரளா தப்பிச் செல்லும் போது களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதும் தெரியவந்தது.

இதனிடையே தீவிரவாதி காஜா மைதீனுக்கு உதவியதாக மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாஃபர் அலி உள்பட 10-க்கும் மேற்பட்டோரை தமிழக க்யூ பிரிவு காவல்துறையின் பெங்களூருவில் கைது செய்தனர். பெங்களூருவில் பதுங்கியிருந்த அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அதே நேரத்தில் டெல்லியில் பதுங்கியிருந்த தீவிரவாதி காஜா மைதீன், நவாஸ் உள்ளிட்ட 3 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனிடையே, வில்சன் கொலை வழக்கை தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தேசியப் புலனாய்வு முகமை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கடந்த 2021-ம் ஆண்டு தீவிரவாதிகள் காஜா மைதீன், அப்துல் சமீம் மற்றும் தவ்ஃபீக் ஆகியோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இவர்களுக்கு உதவியதாக மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா, ஜாஃபர் அலி உள்ளிட்ட சிலரை காவலில் எடுத்து விசாரிக்க கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா மற்றும் ஜாஃபர் அலி ஆகிய 3 பேரை நேற்று மாலை முதல் வரும் 5-ம் தேதி வரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, 3 பேரையும் பெங்களூரு சிறையில் இருந்து சென்னை அழைத்து வந்த என்ஐஏ அதிகாரிகள் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in