'காளி' சர்ச்சை போஸ்டர் : லீனா மணிமேகலை மீது டெல்லியைத் தொடர்ந்து உ.பியிலும் வழக்கு

'காளி' சர்ச்சை போஸ்டர் : லீனா மணிமேகலை மீது டெல்லியைத் தொடர்ந்து உ.பியிலும் வழக்கு

‘காளி’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையால் கவிஞர் லீனா மணிமேகலை மீது டெல்லியைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கவிஞர் லீனா மணிமேகலை ஆவணப்படங்களையும் இயக்கி வருகிறார். இவர் இயக்கிய 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற படங்கள் பல்வேறு பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன. இதற்காக சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் 'காளி' என்ற நிகழ்த்துகலை ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அவரே ’காளி’யாகவும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அதில் 'காளி' வேடம் அணிந்த பெண் புகைப்பிடித்துக்கொண்டு எல்ஜிபிடி (LGBT) கொடியை கையில் பிடித்திருக்கிறார்.

இந்த போஸ்டர் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி பலரும் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் வினீத் ஜிண்டால் என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில், லீலா மணிமேகலை மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்திலும் லீனா மணிமேகலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் வேத் பிரகாஷ் சுக்லாவின் புகாரின் பேரில் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் குற்றச் சதி, வழிபாட்டுத் தலத்தில் குற்றம் செய்தல், மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்துதல் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளருக்கு எதிராக அமைதிக் குலைப்பைத் தூண்டும் நோக்கம் என்பது உள்பட 10 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in