நித்தியின் மோசடி வலையில் சிக்கிய 30 அமெரிக்க நகரங்கள்!

அடங்காத நித்தி அன்ட் கோ
கைலாசாவில் வீற்றிருக்கும் நித்தியானந்தா
கைலாசாவில் வீற்றிருக்கும் நித்தியானந்தா

’ஆங்கில மொழி என்பது அறிவின் அடையாளம்’ என்ற வரிசையில் ’அமெரிக்கா என்பது அதிகம் அறிந்தவர்களின் தேசம்’ என்பதும் தவறே என்று நிறுவும்படியான சம்பவம் நடந்தேறி இருக்கிறது. நிகழ்த்தி இருப்பவர் ‘கைலாசா’ அதிபர் நித்தியானந்தா.

ஆட்கடத்தல் முதல் பாலியல் புகார்கள் வரை பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக நீடிப்பவர் சுவாமி நித்தியானந்தா. நாட்டைவிட்டே ஓடிப்போனவர், ஈக்வடார் தீவுக்கூட்டத்தில் குட்டித் தீவு ஒன்றை வாங்கி, அதற்கு கைலாசா என்று நாமகரணமிட்டு அங்கே தனது ஆஸ்தான சிஷ்ய கேடிகளுடன் முகாமிட்டுள்ளார் நித்தி. கைலாசாவை இறையாண்மை உடைய தேசமாகவும், அமெரிக்கா முதல் ஐநா வரையிலான அங்கீகாரங்களை பெறவும், நித்தி அண்ட் கோ அண்மையில் நடத்திய மோசடி நாடகங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. கூடவே கைலாசா என்ற பெயரில் ஒரு தேசம் இருக்கிறதா என்று ‘கூகுள்’ செய்து பார்க்கவும் மறந்த அமெரிக்கர்களை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

நெவார்க் நகர மேயருடன் கைலாசா பிரதிநிதிகள் ஒப்பந்தம்
நெவார்க் நகர மேயருடன் கைலாசா பிரதிநிதிகள் ஒப்பந்தம்

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான நியூஜெர்சியில் அமைந்துள்ள நெவார்க் என்ற இரண்டாம் கட்ட நகரத்தை குறிவைத்தது நித்தி கும்பல். நெவார்க் மேயர் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளை சந்தித்து ஆன்மிக மற்றும் கலாச்சர ஒப்பந்தங்களை போட்டது. கைலாசா தேசத்தின் பிரதிநிதிகளாக வந்தவர்களுடன் அந்த அமெரிக்க நகரின் ஆட்சியாளர்கள் ஒப்பந்தமிட்டனர். இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கைலாசாவை இறையாண்மை தேசமாக அமெரிக்க ஐக்கிய நாடு அங்கீகரித்ததாக நித்தி கும்பல் விஷமப் பிரச்சாரத்தை தொடங்கியது. அதற்கென ஏமாறும் கூட்டமும் அதில் மயங்கியது.

நெவார்க் நகரத்துடன் ’சிஸ்டர் சிட்டி’ ஒப்பந்தமிட்ட ’கைலாசா தேசம்’ என்பது முற்றிலும் கற்பனையானது என்று ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் பிற்பாடு அம்பலப்படுத்தியது. அப்போதுதான் நெவார்க் மட்டுமன்றி 30க்கும் மேலான அமெரிக்காவின் இரண்டாம் கட்ட நகரங்கள் கைலாசா வலையில் வீழ்ந்திருப்பது ஒவ்வொன்றாக வெளிப்பட்டது. உள்ளங்கையில் இணையம் வளர்ந்த காலத்தில், கைலாசா என்ற பெயரில் ஒரு தேசம் இருக்கிறதா என்பதைக் கூட ஊர்ஜிதம் செய்ய இயலாத அளவுக்கு அங்கே மூடர்கள் நிறைந்திருக்கிறார்கள் என சக அமெரிக்கர்கள் அங்கலாய்த்து வருகிறார்கள்.

ஐநாவில் கைலாசா பிரதிநிதிகள்
ஐநாவில் கைலாசா பிரதிநிதிகள்

அமெரிக்கா மட்டுமன்றி ஐநாவிலும் அண்மையில் கைலாசா பிரதிநிதிகள் முகாமிட்டனர். அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூக நிறுவனங்கள் எதுவும் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கலாம் எனும்படியான ஐநாவின் ஜெனிவா கூட்டம் ஒன்றை குறிவைத்து நித்தி கும்பல் பங்கேற்றது. இது தொடர்பான படங்களை பகிர்ந்து ‘ஐநாவில் கைலாசா பிரதிநிதிகள்’, ’கைலாசாவுக்கு ஐநா அங்கீகாரம்’ என்றெல்லாம் புரளி கிளப்பியது. இந்த தகவல் ஐநா அலுவலகத்தை எட்டியதும், ’கைலாசா பெயரில் பங்கேற்று பேசியவர்களையும், பேச்சையும்’ ஐநா பொருட்படுத்தாது; புறந்தள்ளும் என்று அறிவித்தார்கள்.

எதுவுமே நடவாதது போல அதன் பிறகும், ’யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா’ காபந்துக்கான ராஜீய நடவடிக்கைகளில், ஆன்மிக பூச்சும், இளமை பெருக்கும் கலந்தடித்த யுவதிகளை முன்னிறுத்தி நித்தி சளைக்காது தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இன்டர்போல் ரெட் நோட்டீஸ் வழங்கும் வரை அடங்கமாட்டார் போலிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in