மார்ச் 3, 4-ல் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க 8 ஆயிரம் பக்தர்களுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா பக்தர்கள் சங்கமிக்கும் வரலாற்று சிறப்பு மிக்க கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, நடப்பாண்டு கச்சத்தீ்வு திருவிழா மார்ச் 3, 4-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் பங்கேற்க 8 ஆயிரம் பக்தர்களுக்கு இலங்கை அரசு அனுமதித்துள்ளது. இதனடிப்படையில், இந்தியாவில் இருந்து 3,500 பேர், இலங்கையில் இருந்து 4,500 என 8 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அரசு அதிகாரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் ஆயிரம் பேர் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்த இலங்கை, இந்திய தரப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டது. விழா தொடர்பான முதல் ஆலோசனை கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட அரசு அதிபர் சிவஞானசுந்திரன் தலைமையில் இன்று நடந்தது.
இக்கூட்டத்தில், திருவிழா முன்னேற்பாடுகள், செலவினங்கள், பக்தர்களுக்கான வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து 5 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வர் என இந்திய தூதரக அதிகாரி வலியுறுத்தி உள்ளார்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2021-ம் ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்திய, இலங்கை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்தாண்டு விழாவில், குறைவான எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
நடப்பாண்டு கரோனா பரவல் குறைந்துள்ளதால் 8 ஆயிரம் பக்தர்களுடன் விழாவை சிறப்பாக கொண்டாட ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால், இரு நாட்டு பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.