
திண்டுக்கல் அருகே கல்குவாரியில் அழுகிய நிலையில் கிடந்த உடலை போலீஸார் மீட்டனர். அவர் காங்கேயம் கபடி வீரரா? என விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே கரிக்காலி பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் கயிறுகள் கட்டப்பட்ட நிலையில் உடல் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி குஜிலியம்பாறை போலீஸார், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர்.
குவாரியில் மிதந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலை மீட்டனர். அடையாளம் தெரியாத அவரது உடலில் கல்லை கட்டி குவாரியில் தூக்கி வீசிச் சென்று ஒரு வாரம் இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர் அணிந்திருந்த டீ-சர்ட்டில் காங்கேயம் பகுதியில் சேர்ந்த ஒரு கபடி குழுவின் பெயர் பிரின்ட் செய்யப்பட்டுள்ளது.
கரிக்காலி பகுதியில் உள்ள கல்குவாரிகளில் இளம்பெண் உள்பட 3 பேர் கடந்த சில ஆண்டுகளில் மர்மமாக கொல்லப்பட்டு உள்ளதாக அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட வாலிபரின் அழுகிய உடலை, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பினர். இது தொடர்பாக குஜிலியம்பாறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.