
மழை நீரை அப்புறப்படுத்தாமல் வெள்ளத் தடுப்பு பணிகள் நடைபெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து தாம்பரம் மாநகராட்சி இளநிலை பொறியாளர் வெங்கடேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் மாநகராட்சியில் மூன்றாவது மண்டலத்தில் உள்ள குரோம்பேட்டையில் வெள்ளத் தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா ஆதரவாளர் பிரதீப் சந்திரன் மூன்றாவது மண்டலத் தலைவராக உள்ளார். மூன்றாவது மண்டலத்தில் அதிக அளவு கமிஷன் கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் கிடைக்கிறது எனச் சொல்கிறார்கள். மூன்றாவது மண்டலத்தில் உள்ள 36-வது வார்டில் வெள்ளத் தடுப்பு பணியின் போது மழைநீர் தேங்கியிருந்த கால்வாயில் நீரை அகற்றாமல் சிறுபாலம் அமைக்கும் பணி நடைபெற்றுவந்தது. சண்முகம் என்ற ஒப்பந்ததாரர் இந்தப் பணிகளைச் செய்து வருகிறார்.
வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து புகார் வந்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் மழைநீரை அப்புறப்படுத்தாமல் நடைபெறும் பணிகள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து தாம்பரம் மாநகராட்சி இளநிலை பொறியாளர் வெங்கடேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.