திருடன், திருடன் என அலறிய பெண்; ஆற்றில் குதித்து தப்பிக்க முயன்ற வாலிபர்கள்: கடைசியில் நடந்தது என்ன?

மாட்டிக்கொண்ட திருடர்கள்
மாட்டிக்கொண்ட திருடர்கள்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த  பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை  அறுக்க முயன்ற திருடர்கள்,  பொதுமக்கள் விரட்டியதால் கொள்ளிடம்  ஆற்றில் குறித்து தப்பிக்க முயன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள  மறுகரையில் இருந்தவர்களிடம் வசமாக  சிக்கியிருக்கின்றனர்.

சிதம்பரம் அருகே குமராட்சி அரசூர் பகுதியைச் சேர்ந்த  வாசுவும் அவரது மனைவி ஜெயந்தியும் இன்று காலை  இரு சக்கர வாகனத்தில் குமராட்சி கடைத் தெருவுக்கு வந்து கொண்டிருந்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் வந்தபோது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த இரண்டு  இளைஞர்கள் இவர்களின் இருசக்கர வாகனம் அருகில் வந்து  ஜெயந்தி அணிந்திருந்த  செயினை பறிக்க முயன்றார்கள். அப்போது செயினை இறுகப் பிடித்துக் கொண்ட ஜெயந்தி திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்.

இதையடுத்து அங்கிருந்த  பொதுமக்கள் அந்த  இளைஞர்களை வழிமறித்து தடுக்க முயன்றனர். அதனால்  தங்கள் இரு சக்கர  வாகனத்தை விட்டுவிட்டு  ஓடிப்போய் கொள்ளிடம் ஆற்றில் குதித்து நீந்தி மறுகரையை  நோக்கி சென்றனர். ஆனாலும் பொதுமக்களில் சிலர் விடாமல் அவர்களை துரத்தி சென்றனர். மறுகரையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த பனங்காட்டங்குடி கிராமம் உள்ளது.  அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றின் நடுவே இருவர் தப்பி வருவதையும்,  பொதுமக்கள் விரட்டி வருவதையும் பார்த்துவிட்டு ஆற்றில் இறங்கி அந்த இளைஞர்களை பிடித்தனர்.

பின் தொடர்ந்து வந்த குமராட்சி மக்களிடம் என்ன விவரம் என்று கேட்டு தகவல் தெரிந்து கொண்டு இது குறித்து சீர்காழி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சீர்காழி போலீஸார் இருவரையும் சீர்காழி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள்  நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூரைச் சேர்ந்த  காளியப்பன் மகன் கண்ணன்  (27), மயிலாடுதுறை மாவட்டம் வானகிரியைச் சந்திரன் மகன்  ஜவகர் (22)  என்பது தெரியவந்தது.  இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சீர்காழி போலீஸார்  விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in