ரத்த தட்டணுக்களுக்கு பதிலாக ஏற்றப்பட்ட சாத்துக்குடி ஜூஸ்: டெங்கு நோயாளிக்கு நேர்ந்த கொடுமை

ரத்த தட்டணுக்களுக்கு பதிலாக ஏற்றப்பட்ட சாத்துக்குடி ஜூஸ்: டெங்கு நோயாளிக்கு நேர்ந்த கொடுமை

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ரத்த தட்டணுக்களுக்கு பதிலாக பழச்சாறு ஏற்றியதால் டெங்கு நோயாளி ஒருவர் நேற்று உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம் அம்மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளது.

உயிரிழந்த 32 வயதான நோயாளியின் உறவினர்கள், பிரயாக்ராஜில் உள்ள குளோபல் மருத்துவமனையில் 'பிளாஸ்மா' வுக்கு பதிலாக சாத்துக்குடி சாறினை ஏற்றினார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர். மருத்துவமனையால் பிளாஸ்மா ஏற்றப்பட்ட பிறகு நோயாளியின் உடல்நிலை மோசமடைந்ததாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

உடல்நிலை மோசமடந்த காரணத்தால் அந்த நோயாளி மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்தார். அங்கு உயிரிழந்த நபரை பரிசோதித்த மருத்துவர்கள், நோயாளிக்கு ஏற்கெனவே ஏற்றப்பட்ட ரத்த தட்டணுக்கள் போலியானது என்றும், உண்மையில் ரசாயனங்கள் மற்றும் இனிப்பான பழச்சாறு கலந்தது என்றும் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த நோயாளியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். "எனது 26 வயதான சகோதரி கணவரை இழந்துள்ளார். அந்த மருத்துவமனை மீது யோகி ஆதித்யநாத் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று நோயாளியின் உறவினர் சவுரப் திரிபாதி கூறினார்.

இது குறித்து துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தனது ட்விட்டர் பதிவில், “மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பிளேட்லெட்டுகளுக்கு பதிலாக சாத்துகுடி சாறு ஏற்றப்பட்ட வீடியோ வைரலானதை அறிந்து, எனது உத்தரவின் பேரில் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு பிளேட்லெட் பாக்கெட்டுகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சோதனையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மருத்துவமனை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in