
ஹாத்ரஸ் பட்டியலினச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து செய்தி சேகரிக்கச் சென்றபோது கைதுசெய்யப்பட்ட கேரளப் பத்திரிகையாளர் சித்திக் காப்பனுக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கியது. இதையடுத்து, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார். எனினும், உடனடியாக அவர் கேரளம் திரும்ப முடியாது என்பது கவனிக்கத்தக்கது.
ஹாத்ரஸ் வழக்கு
2020 செப்டம்பர் 14-ல் உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது சிறுமியை முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்து மிகக் கொடூரமாகத் தாக்கினர். அச்சிறுமியின் நாக்கைத் துண்டித்தனர். அவரது முதுகெலும்பையும் நொறுக்கினர்.
உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தச் சிறுமி அலிகரில் உள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் செப்டம்பர் 29-ல் அவர் உயிரிழந்தார்.
ஆரம்பத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்களை ஏற்க மறுத்த போலீஸார், செப்டம்பர் 20-ல்தான் புகாரைப் பதிவுசெய்தனர்.
காப்பன் கைது
நாடெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்க டெல்லியில் பணிபுரிந்துவந்த பத்திரிகையாளர் சித்திக் காப்பன் உட்பட மூன்று பேர் 2020 அக்டோபர் 5-ல் ஹாத்ரஸுக்குப் புறப்பட்டனர். சித்திக் காப்பன் மலையாளத்தில் வெளியாகும் ‘ஆழிமுகம்’ பத்திரிகையின் டெல்லி செய்தியாளராகப் பணிபுரிந்துவந்தார். ஆனால், மதுராவில் நால்வரையும் உத்தர பிரதேச போலீஸார் கைதுசெய்தனர். சித்திக் காப்பன் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்(உபா), தேசத்துரோகக் குற்றம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
ஹாத்ரஸில் சட்டம் ஒழுங்கைக் குலைக்க அவர் முயன்றதாக போலீஸார் தெரிவித்தனர். பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா எனும் அமைப்புடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டினர். ஆனால், இந்த வழக்குகள் புனையப்பட்டவை என காப்பன் கூறினார். எனினும் அவருக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்ததையடுத்து, அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான உத்தர பிரதேச அரசுத் தரப்பு, சித்திக் காப்பன் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர் அல்ல என்றும் கலவரத்தைத் தூண்டுமாறு காப்பனுக்குப் பணம் வழங்கப்பட்டதாகவும் கூறியது. “வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி கலவரச் சூழலை ஏற்படுத்த காப்பன் முயன்றார். அவர் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர். அது ஒரு பயங்கரவாத அமைப்பு” என்று உத்தர பிரதே அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி வாதிட்டார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித், காப்பனிடமிருந்து வெடிகுண்டுகள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்று குறிப்பிட்டார். இதையடுத்து, தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி ரவீந்தர பட் அடங்கிய அமர்வு அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
'ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. ‘பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி தேவைப்படுகிறது; எனவே நாம் பொதுக் குரல் எழுப்புவோம்’ என ஒருவர் ஒரு யோசனையைப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார். அது சட்டத்தின் பார்வையில் குற்றமாகிவிடுமா?’ என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அடுத்த ஆறு வாரங்களுக்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்றும், அதன் பிறகு கேரளம் சென்றதும் அங்குள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். எனவே, காப்பன் உடனடியாகக் கேரளம் திரும்ப முடியாது.
ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவில், தன் மீதான வழக்குகள் புனையப்பட்டவை எனக் குறிப்பிட்ட காப்பன், ‘ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக நான் சிறைவைக்கப்பட்டிருப்பது, சுதந்திரத்துக்கான உரிமை, கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், குறித்த கேள்விகளை எழுப்புகிறது’ என்றும் தெரிவித்திருந்தார்.