பத்திரிகையாளர் ராணா அய்யூப் வெளிநாடு செல்லலாம்!

பத்திரிகையாளர் ராணா அய்யூப் வெளிநாடு செல்லலாம்!

டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி

சமீபத்தில் லண்டன் செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக மும்பை விமான நிலையத்தில் காத்திருந்த பத்திரிகையாளர் ராணா அய்யூப், குடியேற்றத் துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில், சில நிபந்தனைகளின் அடிப்படையில் அவர் வெளிநாடு செல்ல டெல்லி உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியிருக்கிறது.

2002-ல் குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, ‘தெஹல்கா’ இதழின் சார்பில், ரகசியமாகச் செய்தி சேகரித்தவர் ராணா அய்யூப். தான் அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் எனும் நிறுவனத்தின் மாணவி என்றும், தனது பெயர் மைதிலி தியாகி என்றும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு குஜராத்தில் பல மாதங்கள் தங்கியிருந்து பல அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பேசி தகவல்களைச் சேகரித்தவர் அவர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்டவராகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவர் சேகரித்த தகவல்களை, பின்னர் ‘தெஹல்கா’ ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து, அந்தத் தகவல்களின் அடிப்படையில் ‘குஜராத் ஃபைல்ஸ்’ எனும் பெயரில் புத்தகம் எழுதினார் ராணா அய்யூப். தொடர்ந்து பாஜக அரசை விமர்சித்து கட்டுரைகள் எழுதிவருகிறார்.

குற்றச்சாட்டுகள்

அறக்கட்டளை எனும் பெயரில், பொதுமக்களிடமிருந்து சட்டவிரோதமாக நிதி திரட்டியதாக ராணா அய்யூப் மீது புகார்கள் எழுந்தன. 2020 ஏப்ரல் - மே மாதங்களில் குடிசைப்பகுதி மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் திரட்டப்பட்ட நிதி, 2020 ஜூன் - செப்டம்பரில் அசாம், பிஹார் மற்றும் மகாராஷ்டிர மக்களின் நிவாரணத்துக்காகத் திரட்டப்பட்ட நிதி, 2021 மே - ஜூன் மாதங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் திரட்டப்பட்ட நிதி ஆகியவற்றில் அவர் முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. உத்தர பிரதேசத்தின் காஸியாபாதில் உள்ள இந்திரபுரம் காவல் நிலையம் பதிவுசெய்த புகாரின் அடிப்படையில், ராணா அய்யூபின் பெயரிலான 1.77 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியிருந்தது.

விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

இதற்கிடையே வாஷிங்டனிலிருந்து செயல்படும், ‘பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச மையம்’ எனும் தொண்டு நிறுவனம், பிரிட்டனில் ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வற்காக அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மார்ச் 29-ம் தேதி, மும்பையிலிருந்து விமானம் ஏறக் காத்திருந்த அவரைக் குடியேற்றத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை ஏற்று அவர் ஆஜராகாததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், தனது பயணத் திட்டங்களை சமூகவலைதளப் பக்கங்களில் ஏற்கெனவே பதிவுசெய்திருப்பதாகவும், விமான நிலையத்தில் தான் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னரே அமலாக்கத் துறையின் சம்மன் தனது மின்னஞ்சல் முகவரிக்கு வந்து சேர்ந்தது என்றும் ராணா அய்யூப் கூறினார். வழக்கு விசாரணைக்காக ஏப்ரல் 1-ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ராணா அய்யூப் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரத்தன்மை கொண்டவை என வாதிட்டார். ராணா அய்யூபின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விரேந்திர குரோவர், அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் முடக்கப்பட்டுவிட்டதாகவும், பிப்ரவரி 1-ம் தேதிக்குப் பின்னர் அமலாக்கத் துறையிடமிருந்து அவருக்கு சம்மன் வரவில்லை என்றும் தெரிவித்தார். ராணா அய்யூப் அரசை விமர்சிப்பவர் என்பதாலேயே அவர் மீது அமலாக்கத் துறை இந்நடவடிக்கையை எடுத்ததாகவும் அவர் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சில நிபந்தனைகளின் அடிப்படையில் ராணா அய்யூப் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியிருக்கின்றனர்.

Related Stories

No stories found.