
கரூரில் இயங்கி வரும் தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் வரவு செலவு பார்க்கும் பிரிவில் காலியாக உள்ள உதவி மேலாளர் மற்றும் அதிகாரிகள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் தொழில்துறை கட்டுப்பாட்டில் கரூரில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கரும்பு சக்கையில் இருந்து காகிதங்களைத் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎல் நிறுவனத்தில் தற்போது உதவி மேலாளர் (அக்கவுண்ட்ஸ்) பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதேபோல் அதிகாரிகள் (அக்கவுண்ட்ஸ்) பணிக்கு 4 பேர் என மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த 2 பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சமாக 29 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்சம் என்றால் பொதுப்பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 43 வயதுக்குள்ளும், எஸ்.சி, எஸ்.சிஏ, எஸ்.டி பிரிவினர் என்றால் 45 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.09.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வோர் சிஏ அல்லது சிஎம்ஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். உதவி மேலாளர் பணிக்கு என்றால் நிதி மற்றும் அக்கவுண்ட்ஸ் துறையில் 10 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதிகாரி பணி என்றால் சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.tnpl.com/work-with-us/ இணையதளம் சென்று விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆப்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை General Manager (HR), Tamil Nadu Newsprint And Papers Limited, Kaghithapuram - 639 136, Karur District, Tamil Nadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் அக்டோபர் 11-ம் தேதிக்குள் சென்றடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.