
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டவரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 45 பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நல்லபெரட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் வாசு. வெளிநாட்டில் சென்று வேலை செய்ய வேண்டும் என்ற ஆசையில் இவர் இருந்துள்ளார். இதற்காக வெளிநாடு செல்ல கூலி வேலை செய்து பணத்தைச் சேர்த்துள்ளார்.
இந்த நிலையில், மதுரை பாண்டியன் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளிநாட்டு வேலை குறித்த விளம்பரம் செய்துள்ளார். இதையடுத்து அவரை வாசு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சிங்கப்பூரில் வேலை இருப்பதாகவும், அதற்கு ஒரு லட்ச ரூபாயை செலுத்த வேண்டும் என்றும் பாண்டியன் கூறியுள்ளார்.
இதனால் பாண்டியன் வங்கிக்கணக்கிற்கு வாசு, ஒரு லட்ச ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகு தொடர்ந்து வாசு பாண்டியனைத் தொடர்பு கொண்டு எப்போது சிங்கப்பூருக்கு அனுப்புவீர்கள் எனக் கேட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் வாசுவின் செல்போன் எண்ணை, பாண்டியன் பிளாக் லிஸ்டில் போட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாசு, கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதன் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு மதுரைலிருந்த பாண்டியனை கைது செய்து அவரிடமிருந்து 45 பாஸ்போர்ட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அத்துடன் அவரிடமிருந்த லேப்டாப், கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஃபேஸ்புக் மூலம் ஆன்லைன் மோசடி செய்ததாக பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரது நண்பர் பாரதிராஜாவை சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் பணம் கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.