கரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை: தமிழக அரசுக்கு  உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழக்குவது குறித்த விதிகளை வகுத்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி, கரோனா சிகிச்சைப் பணியில் முன் கள பணியாளராக ஈடுபட்டார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் கரோனா பாதித்து அவர் உயிரிழந்தார்.

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால், 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், தனது மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த உத்தரவுப்படி மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, செவிலியர் தனலட்சுமியின் மகளுக்கு கருணை அடிப்படையில் பணி கோரிய மனுவை நிராகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அருணாச்சலம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் கரோனா காலகட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் வகையில் விதிகள் வகுக்கப்படவில்லை என்பதால், அரசு பணியை பெற தகுதி இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,கரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு இழப்பீடும், குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். அதற்கான விதிகளை வகுக்க வேண்டுமென அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு மே 11-ம் தேதி உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால், அதன்படி மாநில அரசு எந்த விதியையும் இதுவரை வகுக்கவில்லை என தெரிவித்த நீதிபதி, உரிய விதிகளை வகுத்து தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in