`எங்களிடம் மருந்தில்லை; பணம் செலுத்தி வெளியில் வாங்கவும்'- நோயாளிகளை பதறவைக்கும் ஜிப்மர் மருத்துவமனை

`எங்களிடம் மருந்தில்லை; பணம் செலுத்தி வெளியில் வாங்கவும்'- நோயாளிகளை பதறவைக்கும் ஜிப்மர் மருத்துவமனை

மருந்து மாத்திரைகள் பற்றாக்குறை நிலவி வருவதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கையிருப்பில் உள்ள மருந்துகளை மட்டும் பரிந்துரைக்க  வேண்டும் என்று அனைத்து துறைகளின் மருத்துவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த  ஜிப்மர் மருத்துவமனை மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது. மிக நவீன வசதிகள் அனைத்தும் உள்ளடக்கிய இந்த மருத்துவமனை புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த  பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.  கரோனா தொற்று பரவல் காரணமாக  கடந்த இரு ஆண்டுகளாக வெளிப்புறச் சிகிச்சைகள் அதிகம்  தரப்படாத சூழல் நிலவியது.

அதனால் தொற்றா நோய்களான நீரிழிவு நோய், மனநோய், இதய நோய், சிறுநீரகவியல்,  புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையில் உள்ளோருக்கும் மாதந்தோறும் இலவசமாக தரவேண்டிய மருந்து மாத்திரைகள் தரப்படவில்லை. இதனால்  பலர் பாதிக்கப்பட்டனர். அதிக விலைக்கு வெளியில் மருந்தகங்களில்  வாங்கி சாப்பிட்டு வந்தனர்.  தற்போது அந்த நிலை மாறி அனைத்து மக்களும் நேரடியாக வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஜிப்மரில் மருந்து மாத்திரைகளுக்கு தொடர்ந்து கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்கு வருவோருக்கு அத்தியாவசிய மாத்திரைகள் கையிருப்பில் இல்லை என்று வெளியில் வாங்க சொல்கின்றனர். இதையடுத்து ஏராளமான மக்கள் புகார் தெரிவித்ததன் அடிப்படையில்  மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள்  நேரில் வந்து ஆய்வு செய்து இப்பிரச்சினை விரைவில்  சரிசெய்யப்படும் என்று உறுதி அளித்தனர்.  ஆனால் இன்னும் சரியாகவில்லை.

இதனிடையே மருத்துவமனைக்கு வரும்  நோயாளிகளுக்கு மருத்துவர்கள்  எழுதித்தரும் மருந்துகள் பெற வரிசையில் நின்று மருந்து சீட்டை காட்டினால், அம்மருந்துகள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால்  வெளியில் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். 

இந்நிலையில்தான் ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர்,  அனைத்து துறைத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "மருத்துவத்துக்கு பிறகு தரப்படும் மருந்து சீட்டில் ஜிப்மர் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகளை மட்டும் பரிந்துரையுங்கள். இங்கு இல்லாத அத்தியாவசிய மருந்தை வெளியில் பணம் செலுத்தி வாங்கிக் கொள்ளுமாறு குறிப்பிட்டு தனிச்சீட்டில் எழுதி தாருங்கள். மருந்தகத்தில் உள்ள மருந்து பட்டியல் துறைகளுக்கு தரப்படும். மருத்துவர்கள் எழுதி தரும் மருந்துகள் பெற மருந்தகத்தில் வரிசையில் நின்று கிடைப்பதில்லை என்று புகார்கள் வருவதால் இச்சுற்றறிக்கை தரப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களுக்கு எளிதில் கிடைத்து வந்த சிகிச்சையும்,  சிகிச்சைக்கு பின்னரான மருந்து மாத்திரைகளும்  கிடைக்காத நிலை ஏற்பட்டு இருப்பதால் அப்பாவி ஏழை நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தேவையான மருந்து மாத்திரைகளை ஜிப்மருக்கு அனுப்ப வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in