இரண்டாவது வழக்கிலும் ஜாமீன்: எப்போது வெளிவருவார் ஜிக்னேஷ் மேவானி?

இரண்டாவது வழக்கிலும் ஜாமீன்: எப்போது வெளிவருவார் ஜிக்னேஷ் மேவானி?

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்ததாக அசாம் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு ஜாமீன் பெற்ற குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு, பெண் காவலரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட இரண்டாவது வழக்கிலும் ஜாமீன் கிடைத்திருக்கிறது.

நாதுராம் கோட்சேவை பிரதமர் மோடி கடவுளாகக் கருதி வழிபடுகிறார் என ஜிக்னேஷ் மேவானி ட்வீட் செய்ததாக அசாம் பாஜகவைச் சேர்ந்த அரூப் குமார் தே புகார் அளித்திருந்தார். அதன் பேரில் பாலன்பூரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்த ஜிக்னேஷ் மேவானியை ஏப்ரல் 20 இரவு 11.30 மணிக்கு அசாம் போலீஸார் கைதுசெய்தனர். அகமதாபாத் கொண்டுசெல்லப்பட்ட அவர், அங்கிருந்து விமானம் மூலம் அசாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அந்த வழக்கில் அவருக்கு ஏப்ரல் 25-ல் கோக்ரஜார் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், உடனடியாக இன்னொரு வழக்கில் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். போலீஸாரைத் தாக்கியதாக அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டதாக அதற்குக் காரணம் சொல்லப்பட்டது. குவாஹாட்டி விமான நிலையத்திலிருந்து கோக்ரஜாருக்கு அழைத்துச் சென்றபோது, பெண் காவலரை கார் இருக்கையின் மீது தள்ளிவிட்டதாகவும் முரட்டுத்தனமாக சைகை செய்ததாகவும், அவதூறாகப் பேசியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டதாக அசாம் போலீஸார் பின்னர் விளக்கமளித்தனர். கோக்ரஜார் செல்லும் வழியில் உள்ள பர்பேட்டா சாலை காவல் நிலையத்தில் ஏப்ரல் 21-ம் தேதி இது குறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டதாகவும் கூறினர்.

இதையடுத்து, மூன்று நாட்கள் போலீஸ் காவலில் ஜிக்னேஷ் மேவானியை வைத்திருந்தபோது இந்தச் சம்பவம் முணுமுணுப்புகூட எழவில்லை என்றும், ஜாமீன் வழங்கப்பட்ட உடனேயே அவரை மீண்டும் கைதுசெய்ய இதைக் காரணமாக போலீஸார் முன்வைப்பதாகவும் அவரது வழக்கறிஞர் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கில் ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் கோரி பர்பேட்டா நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. 1,000 ரூபாய் சொந்த ஜாமீனில் அவர் வெளிவருகிறார்.

முதல் வழக்கில் 3 நாட்கள் போலீஸ் காவல், இரண்டாவது வழக்கில் 5 நாட்கள் போலீஸ் காவல் அவருக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஜாமீன் கிடைத்திருப்பது அவர் சிறையிலிருந்து வெளிவருவதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததையொட்டி இன்று பர்பேட்டா நீதிமன்ற வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் பலர் கூடியிருந்தனர்.

முதல் வழக்கில் ஜாமீன் கிடைத்தவுடனேயே, இரண்டாவது வழக்கில் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டதால், இந்த முறையும் அப்படி ஏதேனும் நிகழுமா என்ற சந்தேகம் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ஊடகர்கள் மத்தியில் நிலவியது.

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவரது வழக்கறிஞர்களில் ஒருவரான ஹுசைன், “அவர் மீது வேறு வழக்குகள் இல்லை என்பதால் அவர் நிச்சயம் சிறையிலிருந்து வெளிவருவார்” என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in