தனியார் துறை வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு 75% ஒதுக்கீடு: ஜார்க்கண்ட் அரசு அதிரடி திட்டம்

மண்ணின் மைந்தர்கள் வேலைவாய்ப்பு
மண்ணின் மைந்தர்கள் வேலைவாய்ப்புதனியார் துறை வேலைவாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு 75% ஒதுக்கீடு: ஜார்க்கண்ட் அரசு அதிரடி திட்டம்

மாநிலத்தில் தனியார் துறையில் உள்ளூர் நபர்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக ஜார்க்கண்ட் அரசு 'ஜர்னியோஜன்' என்ற வேலைவாய்ப்பு போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களை பதிவு செய்ய வேண்டும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் வணிகம் மற்றும் மனிதவளம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், வேலைதேடும் நபர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான பாலமாக போர்டல் செயல்படும் என்று அரசாங்கம் கூறியது. இந்தப் போர்ட்டலைப் பயன்படுத்தும் முதலாளிகள், ‘தனியார் துறையில் உள்ளூர் நபர்களுக்கான ஜார்க்கண்ட் மாநில வேலைவாய்ப்பு சட்டம் 2021’ஐக் கடைப்பிடிக்க வேண்டும்.

"இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்குவதற்கான விதிமுறைகள் இருந்தாலும், உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் தானாக முன்வந்து உள்ளூர் இளைஞர்கள்/பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று முதல்வர் ஹேமந்த் சோரனை மேற்கோள் காட்டி முதல்வர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க, தொழிலாளர் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் தலைமையில் ஒரு குழுவை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் வேலையில்லாத இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் ‘ஜார்கண்ட் மாநிலம், தனியார் துறையில் உள்ளூர் வேட்பாளர்களுக்கான வேலைவாய்ப்பு சட்டம் 2021’ நிறைவேற்றப்பட்டது. 2022 ல், இச்சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான விதிகள் அறிவிக்கப்பட்டன. சட்டத்தின்படி, தனியார் துறைகளில் ரூ.40,000 வரை ஊதியம் பெறும் 75% வேலைகள் மாநிலத்தில் உள்ள "மண்ணின் மைந்தர்களுக்கு" ஒதுக்கப்பட வேண்டும். 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் வேலை செய்யும் தனியார் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் இச்சட்டத்தில் சேர்க்கப்படாது என்று ஜார்க்கண்ட் மாநில அரசு குறிப்பிட்டுள்ளது. ஆனாலும், மத்திய அரசு அல்லது மாநில அரசாங்கத்தின் நிறுவனங்களுக்கு அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இச்சட்டத்தின் விதிகள் பொருந்தும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in