`சிபிஐ ஆபீசர் பேசுறேன்; விசாரணைக்கு வரவும்'- பதறிச் சென்ற பெண்ணை அதிரவைத்த போலி அதிகாரி

`சிபிஐ ஆபீசர் பேசுறேன்; விசாரணைக்கு வரவும்'- பதறிச் சென்ற பெண்ணை அதிரவைத்த போலி அதிகாரி

தன்னை சி.பி.ஐ அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு கூட்டுறவு சங்கத்தின் பெண் ஊழியரிடம் நூதனமுறையில் நகையைத் திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சொக்கலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலா(34) இவர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் கணினி ஆப்ரேட்டராக உள்ளார். இவருக்கு ஒரு போன்கால் வந்தது. அதில் பேசியவர், தன்னை சிபிஐ அதிகாரி எனவும், ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து விருதுநகர் காவல்நிலையத்திற்கு வருமாறும் கோகிலாவிடம் தெரிவித்தார். அவர் தன் மோட்டார் சைக்கிளில் விருதுநகர் காவல்நிலையம் சென்றுகொண்டிருக்கும்போதே மீண்டும் அவருக்கு போன் செய்த அந்த நபர், அவரை கப்பலூர் பகுதிக்கு வருமாறு சொன்னார்.

அதைநம்பி கோகிலா அங்கு சென்றார். அப்போது சி.பி. ஐ அதிகாரி எனப் பேசிய நபர் கோகிலாவை மிரட்டி அவரது டூவீலர், மற்றும் அவர் கழுத்தில் கிடந்த நான்கு பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டார். அதன்பின்புதான் கோகிலாவுக்கு தான் ஏமாற்றப்பட்ட விசயமே தெரியவந்தது. இதுகுறித்து கோகிலா அருப்புக்கோட்டை டவுண் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் சி.பி.ஐ அதிகாரி போல் நடித்து, நூதனமுறையில் நகையைத் திருடியது வேலூர் மாவட்டம், சந்திரம்புதூர் பகுதியைச் சேர்ந்த அன்புகுமார் எனத் தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸார் மேலும் எத்தனை பேரிடம் இதேபோல் சிபிஐ என நடித்துக் கைவரிசைக் காட்டியுள்ளார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in