யோகா தின நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு: பிஹார் ஆளுங்கூட்டணியில் பிளவா?

யோகா தின நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு: பிஹார் ஆளுங்கூட்டணியில் பிளவா?

பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிக்கும், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கும் இடையே அவ்வப்போது உரசல்கள் ஏற்படுவது உண்டு. தற்போது அந்த மோதல் வலுக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால், இக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி தொடருமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. இதன் உச்சகட்டமாக இன்று பாஜகவின் யோகா தின நிகழ்ச்சியை முதல்வர் நிதீஷ் குமாரும் அவரது அமைச்சர்களும் புறக்கணித்துள்ளனர்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் முன்னணியின்(என்டிஏ) கூட்டணியில் அங்கம் வகிக்கிறது ஐக்கிய ஜனதா தளம். இதன் தலைவரான நிதீஷ் குமார் பிஹார் முதல்வராக ஆட்சி செய்ய பாஜக ஆதரவளித்துள்ளது. மூன்றாவது முறையாக தொடரும் ஆட்சியில் ஐக்கிய ஜனதா தளத்தைவிடவும் பாஜக அதிக தொகுதிகள் பெற்றுள்ளது. இதன் பின்னணியில், என்டிஏவின் பழைய உறுப்பினரான லோக் ஜன சக்தி தனித்து போட்டியிட்டது காரணமானது. இக்கட்சியின் தலைவரான சிராக் பாஸ்வான் ஐக்கிய ஜனதா தளத்தைக் குறிவைத்து அக்கட்சி போடியிடும் தொகுதிகளில் தன் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தார். இதனால், ஐக்கிய ஜனதா தளம் பல தொகுதிகளில் தோல்வியடைந்தது. இது பாஜகவின் சூழ்ச்சி என அக்கட்சியினர் ஏற்கெனவே அதிருப்தியில் உள்ளனர்.

இது அடுத்தடுத்து பல்வேறு விவகாரங்களில் மோதலாக உருவெடுத்தது. இந்த மோதல் மத்திய பாதுகாப்புத் துறையின் புதிய வேலைவாய்ப்புத் திட்டமான அக்னிப் பாதையை முன்வைத்து அதிகரித்தது. இத்திட்டத்தை எதிர்த்து நாட்டிலேயே மிக அதிகமான போராட்டங்கள் பிஹாரில் நடைபெற்றன. ரயில்கள் எரிக்கப்பட்டன. துணை முதல்வர் குடியிருப்பு, பாஜக ஆலுவலகங்கள் மற்றும் மத்திய அரசின் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினையில் முதல்வர் நிதீஷ் குமார் மெளனம் காப்பதாக பாஜக புகார் கூறியது. அக்னிப் பாதை திட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் ஜிஹாதிகள் முன்நின்று பிரதமர் மோடியை எதிர்ப்பதாகவும், முதல்வர் நிதீஷ் குமார் உள்ளிட்ட அவரது கட்சியினர் அவர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையிலான பிளவு மேலும் அதிகரித்திருக்கிறது.

இன்று நடந்த யோகா தின நிகழ்ச்சியில் அது பகிரங்கமாக வெளிப்பட்டது. யோகா தினத்தைக் கொண்டாடும் வகையில் இன்று காலை பிஹார் சட்டப்பேரவை சார்பில் அதன் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு முதல்வர் நிதீஷ் குமார், சபாநாயகர் விஜய்குமார் சின்ஹா, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் எம்எல்ஏ-க்கள் என யாரும் வரவில்லை.

இது குறித்து பாஜகவின் மூத்த தலைவரும் வனத் துறை அமைச்சருமான பப்லு என்கிற நீரஜ் குமார்சிங் கூறும்போது, “தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேற விரும்பினால் வெளியேறட்டும். அதைத் தடுக்க நாங்கள் அவர்களது கால்களில் விழ முன்வர மாட்டோம்” எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

இந்தப் புகாரை மறுக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர், அக்னிப் பாதை திட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்களின் சொத்துக்களை புல்டோசர் மூலம் இடிக்கும் பணிகளைத் தனது ஆளுகையின்கீழ் உள்ள உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியாணாவில் ஏன் பாஜக செய்யவில்லை எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

இதற்கு முன்பும் யோகா தின நிகழ்ச்சிகளை ஐக்கிய ஜனதா தளம் புறக்கணித்தது உண்டு. இம்முறை அது இன்னமும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஐக்கிய ஜனதா தளமும் பாஜகவும் பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து முரண்படுகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, சாதிவாரி கணக்கெடுப்பு, ஹிஜாப், பொதுவெளியில் தொழுகை, மசூதிகளின் ஒலிபெருக்கி போன்ற நடவடிக்கைகளில் பாஜகவிலிருந்து மாறுபடும் வகையில் ஐக்கிய ஜனதா தளம் கருத்து தெரிவித்திருந்தது.

பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. அவர்களில் 127 இடங்களில் வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இதில், பாஜக 77 உறுப்பினர்களையும், ஐக்கிய ஜனதா தளம் 45 உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றன. இதே கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சாவிற்கு 4 எம்எல்ஏக்களும் உள்ளனர். இங்கு முக்கிய எதிர்க்கட்சியாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி உள்ளது.

இப்படியான சூழலில் ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நடக்கும் மோதல், எதிர்க்கட்சிகளுக்கு வலு சேர்க்கும் எனக் கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in