ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை: உக்ரைன் விவகாரம் பேசப்படுமா?

ஜப்பான் பிரதமரின் இந்திய வருகை: உக்ரைன் விவகாரம் பேசப்படுமா?

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இரண்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். 14-வது ஆண்டாக நடக்கும் இந்தியா - ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் கலந்துகொள்ளும் அவர், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கும் இடையே, 2018 அக்டோபரில் நடந்த மாநாட்டுக்குப் பின்னர் நடக்கும் முதல் மாநாடு இது.

2014-ல் மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், ஜப்பானுடனான உறவில் இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. 2021 அக்டோபர் 4-ல் ஜப்பான் பிரதமராக ஃபுமியோ கிஷிடா பொறுப்பேற்ற நிலையில், தொலைபேசியில் அழைத்து அவருக்கு வாழ்த்து சொன்னார் மோடி. அப்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர்.

சிறப்பு வியூகம் மற்றும் உலகளாவிய கூட்டு எனும் அடிப்படையில் இந்தியாவும் ஜப்பானும் பல்வேறு தளங்களில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளம் ஆகியவற்றில் முன்னேற்றம் காண்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சாலை வசதிகள், வனப் பாதுகாப்பு, பேரிடர் பாதிப்பு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஜப்பான் பங்களிக்கிறது. மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளிலும் ஜப்பானின் பங்களிப்பு உண்டு.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் ஜப்பானும் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்துவந்த நிலையில், இந்தப் போரினால் அதில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் போரின் விளைவுகள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.