வெடிபொருட்களை அமேசான், ஃபிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து வாங்கிய ஜமேஷா முபின்: காவல் துறை அதிர்ச்சி தகவல்!

 ஜமேஷா முபின்
ஜமேஷா முபின்

கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்காக வேதிப்பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து ஜமேஷா முபின் பெற்றதாக காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக சென்ற கார் அங்கிருந்த கோயில் முன்பு அக்.23-ம் தேதி அதிகாலை வெடித்து தீப்பிடித்தது. இதில் காரில் இருந்த உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டை போலீஸார் சோதனையிட்ட போது வெடிபொருட்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அவர் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து மர்மப்பொருளை காருக்குத் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் சிக்கியது. இதையடுத்து அந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த நிலையில் கோவை காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்தபேட்டியில், " முபினின் வீட்டில் கைப்பற்றப்ட்ட மூலப்பொருட்கள் குறைந்த திறனுடைய வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுபவையாகும். அவர் மேலும் நிறைய வெடிகுண்டுகளை தயாரிக்க திட்டமிட்டிருந்தது தெரியவருகிறது. அவரது வீட்டில் இருந்த மூலப்பொருட்களின் மாதிரிகளை தடயவியல் துறையினர் சோதனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அதன் அறிக்கை வந்தால் மட்டுமே எந்த மாதிரியான வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டது என்பது விசாரணையில் தெரியவரும்.

இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நிறைய பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். வெடிப்பொருள்களை முபின் எப்படி வாங்கினார் என்பதை கண்டறிய முயன்ற போது அவை ஆன்லைன் வணிக நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட்டில் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. கோவை சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். தற்போது கைதானவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in