அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு போட்டி துவக்கம்: சீறிப்பாயும் காளைகள்!

அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு போட்டி துவக்கம்: சீறிப்பாயும் காளைகள்!

பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கியது. தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றும் இந்த போட்டியைப் பார்க்க பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களும் குவிந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வரத் தொடங்கியுள்ளன. இப்போட்டியை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, எம்.பி வெங்கடேசன் ஆகியோர் தொடக்கிவைத்தனர். ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். போட்டி நடைபெறும் இருபுறமும் பார்வையாளர்கள் பகுதியில் எட்டு அடி உயரத்திற்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. அதன் வெளியே நின்று பார்வையாளர்கள் பார்க்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்புப் பணியில் 1300 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் வெல்லும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதேபோல் சிறந்த பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு டூவீலர் வழங்கப்பட உள்ளது. ஏராளமான நிறுவனங்கள், தனிநபர்களின் சார்பில் தங்கக்காசும் வழங்கப்படுகிறது. வாடிவாசலில் இருந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தொடர்ந்து, உரிமையாளர்களின் காளைகள் அவிழ்க்கப்பட்டன. இதில் மொத்தம் 1004 காளைகள் அவிழ்த்துவிடப்பட உள்ளது. மொத்தம், 318 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு உள்ளனர். மாடி பிடி வீரர்களுக்கு முன்னதாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டுப் போட்டியால் அவனியாபுரம் சுற்றுவட்டாரப் பகுதியே களைகட்டியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in