சென்னை புத்தகக்காட்சியில் ‘ஜெய்பீம்’ திரைக்கதை நூல்!

ஜெய்பீம் திரைக்கதை நூலுடன் சூர்யா
ஜெய்பீம் திரைக்கதை நூலுடன் சூர்யா

சூர்யா நடிப்பில் வெளியான ’ஜெய்பீம்’ திரைப்படத்தின் திரைக்கதை, வசனம் மற்றும் படக்குழுவினரின் பேட்டிகளை உள்ளடக்கிய நூல், சென்னை புத்தகக்காட்சியில் விற்பனை வருகிறது.

டி.செ.ஞானவேல் இயக்கத்தில் 2021, நவ.2 அன்று வெளியான திரைப்படம் ஜெய்பீம். செங்கேணி - ராஜாக்கண்ணு என்ற இருளர் சமூகத்தை சேர்ந்த அப்பாவி தம்பதிக்கு, காவல்துறை உள்ளிட்ட அதிகார வர்க்கத்தினரால் இழைக்கப்பட்ட கொடுமையையும், அவர்களுக்கான நீதி கோரும் ஒரு வழக்கறிஞரின் போராட்டத்தையும் ஜெய்பீம் திரைப்படம் பதிவு செய்திருந்தது. 90களின் தொடக்கத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில், சுவாரசியமான திரைக்கதை பின்னலுடன் ஜெய்பீம் உருவாகி இருந்தது.

நீதியரசர் சந்துரு, வழக்கறிஞராக கடந்து வந்த அனுபவங்களின் அடிப்படையில், அதன் அவலமும், உருக்கமும் குறையாது இயக்குநர் த.செ.ஞானவேல் பதிவு செய்திருந்தார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படத்தில், கே.மணிகண்டன், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் உடன் நடித்திருந்தனர். படத்தின் சில காட்சிகள் பொதுவெளியில் சர்ச்சைகளையும் எதிர்கொண்டது. பாமக கட்சியினர் பகிரங்கமாக படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவற்றின் மத்தியில் ஜெய்பீம் திரைப்படம் விமர்சன ரீதியிலான வரவேற்பையும், வசூலையும் வாரிக் குவித்தது. தற்போது இந்த ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் திரைக்கதை - வசனம் - பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலாக வெளியாக உள்ளது. சந்துரு, சூர்யா, ஞானவேல் மற்றும் திரைப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுடன் ‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸ் கலந்துரையாடியதும் இந்த நூலில் அடங்கி உள்ளன. எதிர்வரும் ’2023 சென்னை புத்தகக்காட்சி’யில் ’ஜெய்பீம்’ நூல் விற்பனைக்கு கிடைக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in