கருத்தடை செய்யப்பட்ட நாய் மீண்டும் கர்ப்பம்: மாமன்ற உறுப்பினர் பேச்சால் கூட்டத்தில் சிரிப்பலை!

கோவை மாநகராட்சி கூட்டம்
கோவை மாநகராட்சி கூட்டம்

கருத்தடை செய்யப்பட்ட நாய் மீண்டும் கர்ப்பம் ஆனது என கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மத்திய மண்டல தலைவர் தெரிவித்த சுவாரசிய தகவலால் அங்கு  சிரிப்பலை எழுந்தது.

கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சியின் விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில்  ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ரூ.648 என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர்  வ.உ.சி. சிறுவர் பூங்காவிற்கு கட்டணம் உயர்த்தி வசூலித்தல், வ.உ. சிதம்பரனாருக்கு முழு திருவுருவச் சிலையினை வ.உ.சி. பூங்காவில் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்தல்,  தெரு நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ள  நாய் ஒன்றுக்கு ரூ.445-ல் இருந்து ரூ.700 என்ற வீதத்தில் நிதி ஒதுக்கீடு செய்தல்  உள்ளிட்ட 65 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் பின்னர் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு பேசுகையில், " தெரு நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளும் பணி நடக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி நிர்வாகம் இப்பணியை மேற்கொள்கிறது. அண்மையில் பெண் நாய் ஒன்றுக்கு கருத்தடை செய்யப்பட்டது.  ஆனால் 6 மாதம் கழித்து அந்த நாய் மீண்டும் கர்ப்பம் ஆனது" என்றார்.

இதனால் மன்றத்தில் சிரிப்பலை எழுந்தது. மேயர், கமிஷனர் உள்ளிட்டோர் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தனர். ஆனால், முறையாக கருத்தடை செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய உறுப்பினரின்  கருத்து முக்கிய பொருளாக அங்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in