பிபிசி மீதான வருமான வரித்துறை ஆய்வு என்ன சொல்கிறது?

பிபிசி
பிபிசி

வரி ஏய்ப்பு மற்றும் வருமான வரி சட்ட மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக, பிபிசி நிறுவனம் மீதான வருமான வரித்துறையினரின் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச ஊடக நிறுவனமான பிபிசியின் டெல்லி மற்றும் மும்பையில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகங்களில், வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரி வாரியம் திடீர் ஆய்வு மேற்கொண்டது. செவ்வாய் இரவு தொடங்கி வியாழன் இரவு வரையிலான 3 நாட்களில் சுமார் 60 மணி நேரங்களுக்கு இந்த ஆய்வு நீடித்தது.

ஆய்வின் முடிவாக வருமான வரித்துறையின் அதுதொடர்பான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பிபிசி அலுவலகங்களில் சேகரிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஆதாரங்கள் ஆராயப்பட்டு வரும் நிலையில், தற்போதைக்கு முதல்கட்ட அறிக்கை ஒன்றினை வருமான வரித்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இந்தியாவில் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், வருமான வரிக்கான சட்டங்கள் பல இடங்களில் மீறப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து இதர மொழிகளிலும் பிராந்திய சேவைகளை அளித்து வரும் பிபிசி, அவற்றுக்கென தனியாக வரி செலுத்துவதில் குறைபாடுகள் நிலவுவதாகவும், வெளிநாட்டு செய்தியாளர்களுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட ஊதியத்துக்கான வரிகள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும், பிபிசி தரப்பில் போதிய ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை என்றும், ஆய்வின்போது செய்தி நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏதும் இல்லை என்றும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். பிபிசி அலுவலகங்களின் வருமான வரி ஆய்வு தொடர்பான முழு அறிக்கை வெளியான பிறகே பின்னணி விவரங்கள் தெரிய வரும். இது தொடர்பாக, பிபிசி நிறுவனத்தின் தரப்பு பதிலை இன்று எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in