200 கோடி வருமானம் மறைப்பு; 26 கோடி ரொக்கம் பறிமுதல்: அன்புச்செழியன், தாணு வீட்டில் நடந்த ரெய்டில் அதிர்ச்சி தகவல்

200 கோடி வருமானம் மறைப்பு; 26 கோடி ரொக்கம் பறிமுதல்: அன்புச்செழியன், தாணு வீட்டில் நடந்த ரெய்டில் அதிர்ச்சி தகவல்

பிரபல திரைப்பட தயாரிப்பாளரான அன்புச் செழியன் மற்றும் பிரபல தயாரிப்பாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 200 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மதுரையை பூர்வீகமாகக் கொண்டவரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான அன்புச் செழியன் 'வெள்ளைக்காரத்துரை', 'தங்கமகன்', 'ஆண்டவன் கட்டளை' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இச்சூழலில், இவர் தயாரித்து வெளியான 'பிகில்' திரைப்படத்தில் கிடைத்த வருவாயில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்புச்செழியனின், கலைப்புலி எஸ்.தாணு, ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு, தியாகராஜன் உள்ளிட்ட பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் சில திரைப்பட வினியோகஸ்தர்கள் ஆகியோருக்குச் சொந்தமான சென்னை, மதுரை, வேலூர், கோவை, உள்ளிட்ட 40 இடங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.

திரைப்பட பைனான்சியர்களுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் காட்டப்படாத கடன் தொகை தொடர்பான உறுதிப் பத்திரங்கள் சிக்கியதாகவும், பல்வேறு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் சமர்பிக்கப்பட்ட வருமான கணக்கு வழக்குகளைத் தாண்டி வரி ஏய்ப்பு நடந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறை, கணக்கில் காட்டப்படாத வருமானத்தை, கணக்கில் காட்டப்படாத முதலீடுகளில் முதலீடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் திரையரங்குகள் மூலம் வரும் வருமானத்தை மறைத்து கணக்கு காட்டியது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அந்த ஆவணங்கள் மூலம் விநியோகஸ்தர்கள் அனைவரும் ஒரு சிண்டிகேட்டை உருவாக்கி திரையரங்க வருமானங்களை மறைத்துக்காட்டி உண்மையான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாகவும், இந்த சோதனையில் 200 கோடி ரூபாய்க்கு அதிகமான வருமானம் மறைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதுடன் கணக்கில் காட்டப்படாத 26 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in