கோவையில் வெடித்தது சிலிண்டர் குண்டா?: போலீஸார் சந்தேகம்


கோவையில் வெடித்தது சிலிண்டர் குண்டா?: போலீஸார் சந்தேகம்

கோவை உக்கடத்தில் இன்று அதிகாலை காரில் சிலிண்டர் வெடித்ததாக சொல்லப்படும் சம்பவத்தில் தடயவியல் ஆய்வுக்குப் பிறகு   அது சிலிண்டர் குண்டாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

கோவை உக்கடத்தில் இன்று அதிகாலையில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, சாலையில் சென்று கொண்டிருந்த மாருதி கார் ஒன்று திடீரென  வெடித்து சிதறியது. இதனையடுத்து அருகே இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயைப் போராடி அணைத்தனர்.

இதனையடுத்து காரில் போலீஸார் சோதனை மேற்கொண்ட போது ஒருவர் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து இது  தொடர்பாக கோவை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில்  இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறப்பட்டது. அதனையடுத்து அந்தப் பகுதி முற்றிலும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு  வெளி நபர்கள்,  பத்திரிகையாளர்கள் யாரும் நுழையா வண்ணம் போலீஸாரால் பாதுகாக்கப்பட்டது.

இதுகுறித்து ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.  காரின் பதிவு எண்ணை  வைத்து பொள்ளாச்சி பகுதியில் எரிந்த  கார் யாருடையது?  காரில் இருந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலீஸாரின்  விசாரணை வளையத்திற்குள்  கொண்டு வரப்பட்டிருக்கிறார்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் கோவை உக்கடம் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருப்பதால் மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெற வண்ணம் தடுக்க அந்த பகுதி உட்பட  கோவை முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டு கோவையில்  தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  சென்னையில் இருந்து காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கிளம்பி கோவைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வெடித்துச் சிதறிய காரை தீவிரமாக அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.  காரில் மேலும் ஒரு சிலிண்டர் வெடிக்காமல் இருப்பது தெரியவந்தது.  வெடித்துச்  சிதறிய சிலிண்டருக்கு அருகே இரண்டு கிலோ அளவிற்கு ஆணிகள் கிடந்ததும் கண்டறியப்பட்டது.  இதனால் வெடித்தது சிலிண்டர் குண்டாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.  தீபாவளி பண்டிகை நேரத்தில்  மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலிண்டர் வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும் இதில் சதிச் செயல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in