
நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத், தனது சுயசரிதை புத்தகம் வெளியிடும் முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளார்.
தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத், இஸ்ரோவில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து வருகிறார். அவரது ஒருங்கிணைப்பில் சந்திரயான் 3 மிக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. அது தவிர நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் சோதனை வடிவத்தில் உள்ளது. சூரியனை ஆராயவும் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அவர் தனது வாழ்க்கை வரலாற்றை ’நிலவொளியைக் குடித்த சிங்கங்கள்’ என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தகமாக வெளியிட உள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில், அந்த சுயசரிதை புத்தகத்தில் முன்னாள் இஸ்ரோ இயக்குனர் கே.சிவன் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான சில விமர்சனக் கருத்துகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.
அதனையடுத்து தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதில் இருந்து விலகுவதாக சோம்நாத் தெரிவித்துள்ளார். மேலும், சோம்நாத் தனது சுயசரிதையில் தனது முன்னோடியான சிவனைப் பற்றி சில விமர்சனக் கருத்துகள் இருப்பதாகக் கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.
" ஒரு நிறுவனத்தில் உயர் பதவியை அடைவதற்கான பயணத்தின்போது ஒவ்வொரு நபரும் சில வகையான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்கள் பல சவால்களை கடக்க வேண்டியிருக்கும். இவை அனைவரும் கடக்க வேண்டிய சவால்கள். அதிகமான நபர்கள் குறிப்பிடத்தக்க பதவிக்கு தகுதியுடையவர்களாக இருக்கலாம். நான் அந்த குறிப்பிட்ட விஷயத்தை வெளியே கொண்டு வர முயற்சித்தேன். இது சம்பந்தமாக எந்த குறிப்பிட்ட நபரையும் நான் குறிவைக்கவில்லை" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இதன்மூலம் நாட்டின் உயரிய நிறுவனம் குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்துள்ளன.