ஏழை இந்துவின் உயிரைக்காக்க நிதி திரட்டிய இஸ்லாமியர்கள்: கேரளப் பள்ளிவாசல்களில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

ஏழை இந்துவின் உயிரைக்காக்க நிதி திரட்டிய இஸ்லாமியர்கள்: கேரளப் பள்ளிவாசல்களில்  நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராகேஷ் பாபுவின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக இஸ்லாமியர்கள் நிதி திரட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத எல்லைகளைக் கடந்த இந்த மனிதநேய செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் பாபு(38) ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திவந்தார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த 5 மாதங்களாக அவர் ஆட்டோ ஓட்டவில்லை. அவரது வீட்டின் ஒரு ஓரத்திலேயே அந்த ஆட்டோ நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ராகேஷ் பாபு, கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது அறுவை சிகிச்சைக்காக மலப்புரத்தில் உள்ள இருபதுக்கும் அதிகமான பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்ததும் நிதி வசூலித்தனர். ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக அந்த தொழுகை நேரத்தில் மட்டும் 1.38 லட்சம் ரூபாய் நிதி திரண்டது. அவர்கள் நிதி வசூலித்த பாக்கெட்டில் ‘ராகேஷ் பாபு சிகிச்சை நிதி” என்னும் எழுத்தும் இடம்பெற்றிருந்தது. ஆனாலும் மதம் வேறு என்பதையெல்லாம் கடந்து நேசக்கரம் நீட்டினர் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்கள்.

ராகேஷ் பாபுவின் சிகிச்சைக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் கமிட்டியின் செயலாளர் பாசிம்பாரி, “நிதி திரட்டி சிகிச்சைக்கு உதவவேண்டும் என்று மட்டுமே நினைத்தோம். அவரது மதம் பற்றி சிந்திக்கவே இல்லை. நிதி திரட்டுவதில் பள்ளிவாசலும் ஒரு ஆதாரமாக இருந்தது. ராகேஷ் கடந்த 12 ஆண்டுகளாகவே சிறுநீரக நோயினால் அவதிப்பட்டு வருகிறார். அவரது அம்மாவின் சிறுநீரகம் அவருக்குத் தானமாக வழங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதே அவரது சொந்த வீட்டை விற்றுத்தான் அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின் ஆட்டோ ஓட்டிவந்தார். கரோனா காலக்கட்டத்தில் அவருக்கு மஞ்சள் காமாலையும், அம்மை நோயும் வந்தது. இதனால் தானமாக பெற்ற சிறுநீரகமும் சேதமானது. மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை ராகேஷ் பாபுவுக்குத் தேவையானது. அதற்கு 15 லட்சம் ரூபாய் செலவானது. நாங்கள் விரைவிலேயே மீதித்தொகையையும் திரட்டுவோம். இதை நாங்கள் சொன்னதும், அனைத்து மசூதிகளின் இமாம்களும் ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மதத்தைவிட உயிர் பெரிதாகத் தெரிந்தது. நிதியைக் கொடுத்துவிட்டு ராகேஷ் பாபுவின் உடல்நலனுக்கான பிரார்த்தனையும் செய்தனர்” என்றார்.

கேரளத்தில் கடந்த சில மாதங்களாகவே மதரீதியான மோதல்கள் அதிகரித்து வருகிறது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இடையே நடந்துவரும் மோதலில் கடந்த 6 மாதங்களில் மட்டும், இருதரப்பிலும் சேர்த்து 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இப்படியான சூழலில் மலப்புரத்தில் நடந்த இந்த மனித நேய செயல் இரு சமூகங்களுக்குள்ளும், சுமுகப் புரிதலுக்கும் துணைநிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.