இதுக்கு பேரு ராயல்டியா, படைப்பாளியின் வலி தெரியுமா?: பதிப்பகத்திற்கு எதிராக பொங்கிய எழுத்தாளர்

பிரபு தர்மராஜ் வெளியிட்டுள்ள ஸ்கிரீன் ஷாட்
பிரபு தர்மராஜ் வெளியிட்டுள்ள ஸ்கிரீன் ஷாட்

பதிப்பகம் ஒன்று ராயல்டி என்னும் பெயரில் தன்னை ஏமாற்றியதாக சமூகவலைதளத்தில் எழுத்தாளர் பிரபு தர்மராஜ். வேதனை தெரிவித்துள்ளார்.

Faiz Amir

'அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி அரவான்', 'கோலப்பனின் அடவுகள்', 'ராணி இல்லம்' உள்பட பல நகைச்சுவை படைப்புகளை எழுதியவர் எழுத்தாளர் பிரபு தர்மராஜ். தமிழில் சமகாலத்தில் நகைச்சுவை சார்ந்த ஆக்கங்களுக்காகக் கொண்டாடப்படும் எழுத்தாளர் பிரபு தர்மராஜ், தன்னை பதிப்பகம் ஒன்று ராயல்டி என்னும் பெயரில் ஏமாற்றியதாக சமூகவலைதளத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில்," 'நீங்க லாட்ஜில ரூம் போட்டு லார்ஜடிக்க நான் உக்காந்து எழுதணுமா?' என்று ஒரு பாவப்பட்ட பெண்மணி முகநூலில் பதிவிட்டுக் கேட்ட போது அவர்களை வேடிக்கை பார்த்தபடிதான் ஒரு நாய் போல உட்கார்ந்திருந்தேன். அந்த வார்த்தைகளின் தீவிரத்தன்மையை நான் உணர்ந்தபோது அதை எழுதிய அந்தப் பெண்மணியின் மனநிலை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பது இன்றெனக்குப் புரிகிறது.

நான் எழுதி நீங்கள் அச்சிட்டு அதைக் காசு கொடுத்து வாங்கிப் படித்துவிட்டு என்னிடம் பேசிய நபர்களின் எண்ணிக்கை நீங்கள் விற்றதாகச் சொன்ன பிரதிகளின் எண்ணிக்கையை விட அதிகமாயிருப்பதில் வியப்பு எனக்கு. ஒருவேளை என்னுடைய புத்தகத்தின் ஆவியை அவர்கள் படித்திருக்கலாம். நீங்கள் உங்கள் பதிப்பகத்தின் வாயிலாகப் பதிப்பித்த என்னுடைய புத்தகங்கள் தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு கடையிலாவது விற்பனைக்கு இருக்கிறதா? அதற்கு சர்வதேச புத்தகத் தர எண் (ISBN) இருக்கிறதா? இல்லையென்றால் ஏனில்லை?

கடைகளில் புத்தகங்கள் வைத்தால் அந்தக் கடைக்காரர்கள் காசு தராமல் ஏமாற்றுகிறீர்கள் என்ற குற்றச்சாட்டை நீங்கள் வைத்தீர்கள்! அதைத்தானே இன்றைக்கு எனக்கு செய்து மாலையிட்டு வாய்க்கரிசி போட்டிருக்கிறீர்கள்? ஆரம்பத்தில் புத்தக பதிப்பிற்கான ஒப்பந்தம் போடாமல் இருக்கும்போதே ஒரு சந்தேகம் இருந்தது. ஒரு எழுத்தாளன் யாரை நம்ப வேண்டும்? தன்னுடைய படைப்பையா? பதிப்பகத்தையா? வாசகர்களையா?

பதிப்பாளர்கள் விற்றதாகச் சொல்லும் புத்தகங்களின் எண்ணிக்கையையா? உழைத்தவனின் உள்ளங்கை வியர்வை காய்வதற்குள் அவனது ஊதியத்தை அவனுக்குக் கொடுத்து விடவேண்டும் என்ற விஷயம் மேடைகளில் வாய்க்கிழியப் பேசும் உங்களுக்குத் தெரியாதா? பிச்சையெடுத்துதான் இலக்கியத்தை நாட்டி நிறுத்த வேண்டும் என்னும் இழிநிலை தமிழிலக்கியச் சூழலில் என்றேனும் இருந்திருக்கிறதா? ஒரு உலகறிந்த பிரபலமான புத்தகக் கடையில் நான் சொல்லி நீங்கள் அனுப்பி வைத்த பத்துப் பிரதிகளுக்கான தொகையை அந்தக் கடையின் மேலாளரை நீங்கள் விரட்டியடித்து வாங்கின போதே எனக்குத் தெரியும் நீங்கள் எனக்கும் அதே வேலையை ரிவர்சில் காட்டுவீர்கள் என்பது.

உங்கள் ராயல்டி தொகையை வைத்துதான் நான் சாப்பிட வேண்டும் என்னும் நிலை எனக்கில்லையென்றாலும் என்னுடைய உழைப்பையே வைத்து ஒரு வாய் உணவை எனக்குத் தெரியாமல் இன்னொருவர் உண்பதென்பது எனக்கிழுக்கு. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாயை மருத்துவமனையில் கொண்டு போய் என் தாய் தகப்பனுக்காய் அழுது கொண்டிருக்கிறேன். அம்மாதிரியான ஒரு நிலை உங்களுக்கு வரக்கூடாதென்றே நான் இயற்கையைத் தொழுகிறேன்.

நீங்கள் என்னவென்றால் என்னை உங்கள் கடை வாயில் பூத்த புழு என்று எண்ணிக் காய் நகர்த்துகிறீர்கள்? ஒரு போன்கால் செய்து பேசும் அளவிற்கு நேரமில்லாத மனிதர்களை இன்றுதான் உங்கள் வாயிலாகப் பார்க்கிறேன். வெறும் வாய்ஸ் நோட்டில் மட்டுமே பதில் சொல்லும் அளவிலான நேரமே இல்லாத முக்கியஸ்தர்கள் நீங்கள் என்பதும் ஒரு வகையில் அவநம்பிக்கையே.

ஒரு தொலைபேசி அழைப்பு என்பது எத்தனை முக்கியமென்று தெரியுமா உங்களுக்கு? அதில் வருவது மரணச் செய்தியாகவும் இருக்கலாம். பெருமைக்காய்ச் சொல்லவில்லை. மிகுந்த உயர்பதவிகளில் இருக்கும் நண்பர்களும், சொந்தக்காரர்களும் என்னோடு இருக்கிறார்கள். எப்போது நான் அழைத்தாலும் என்னுடைய அழைப்பை இரண்டு நொடிகளில் எடுத்துப் பதில் பேசுவார்கள். ஆனால் நீங்கள் புறக்கணிப்போ நிராகரிப்போ எதுவென்றாலும் அதை அலட்சியாமாய்ச் செய்கிறீர்கள்.

மொத்தமாய் ஏழு புத்தகங்களை உங்களிடம் தந்திருந்தேன். ஒரு புத்தகத்துக்கு மூவாயிரம் என்றாலும் மொத்தமாய் 21000 வந்திருக்க வேண்டும்! நீங்கள் அனுப்பிய கணக்கை எண் நண்பர்களிடம் காட்டிய அடுத்த நொடி அவர்கள் என்னைக் காறித்துப்பாத குறைதான். 'என்னவோ பெரிய எழுத்தாளன் மயிராண்டின்னு சொன்னீயே? நாலு பொடிப்பயல்கள நம்பி ஏமாந்துருக்க?' என்று ஒருவன் வாய்திறந்து கேட்டான். சொல்லுங்கள் சகோதரர்களே! நான் அவனுக்கு என்ன பதில் சொல்ல வேண்டும்? யாரை ஏமாற்ற வேண்டும் என்கிற குறைந்தபட்ச அறிவுகூட உங்களுக்கு இல்லையே? நான் உங்களை ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் எனக்கு உண்மை பேசுவது எப்போதும் பிடிக்காது. புத்தக வெளியீட்டுக்கு நீங்கள் அழைத்து வந்தபோதெல்லாம் தெற்கு எல்லையில் இருந்து தலைநகருக்கு வந்த செலவில் பத்தில் ஒரு பங்கைக் கூட நீங்கள் என் உழைப்பிற்குத் தரவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! பிரபுவின் புத்தகம் வெறும் நூறு அல்லது நூற்றியைம்பது பிரதிகள்தான் விற்றது என்று நீங்கள் வெளியில் சொல்லிப் பாருங்கள் அல்லது உங்கள் முகநூல் பக்கத்தில் கணக்கோடும் ரசீதுகளோடும் வெளியிடுங்களேன் பார்க்கலாம். சிரித்து விடுவார்கள்.

தங்கமுட்டையிடும் வாத்து நான் என்பதில் மிகுந்த பெருமையிருக்கிறது. என்னுடைய இரண்டு கதைகளைத் திருடி அதைத் திரைப்படமாய் எடுத்து வெளியிட்டுக் கோடிக்கணக்கில் பணம் பார்த்தார்கள் என்பது உங்களுக்கும் தெரியும்! அதே போக்கிரித்தனத்தைத்தான் இன்றைக்கு நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்பதை நான் உங்களிடம் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் நீங்கள் என்னுடைய சகோதரர்கள்! சகோதரர்கள் என்றாலே துரோகம்தான் இழைக்க வேண்டுமென்ற சர்வதேச விதியை நீங்களாவது தவிர்த்திருக்கலாம்! என்னுடைய மூன்று வருட உழைப்புக்கு வெறுமனே நீங்கள் போட்டிருக்கும் பிச்சையைப் பார்த்து எனக்குச் சிரிப்பு வருகிறது. உங்களுக்குக் கண்ணீர் வரவில்லையா? அந்த ராயல்டி தொகை வந்ததும் அந்தத் தொகையில் என்னுடைய மொத்த குடும்பத்துக்கும் செருப்பு வாங்கிக் கொடுப்பேன்.

என்னால் எந்தப் பிரயோஜனமுமில்லை என்றாலும் எனக்கு உணவு கொடுத்து, நீங்கள் புத்தகங்கள் வெளியிடும்போதெல்லாம் காசு கொடுத்து அனுப்பி வைக்கும் என்னுடைய குடும்பத்தினர் தினமும் அந்தச் செருப்புகளை மிதிக்கட்டும்! நீங்கள் என்னை மட்டும் ஏமாற்றவில்லை! அப்பா ராயல்டி வந்ததும் ஒரு தங்கக் கொலுசு வாங்கிக் குடுப்பியா? என்று கேட்ட என் மகளிடம் ‘அப்பாவின் உழைப்பு விழலுக்கு இறைக்கப் பட்டிருக்கிறது எனதருமை மகளே!’ என்று சொல்லப் போவதை நினைத்து மிகுந்த கவலையடைகிறேன்! அதற்குக் காரணம் நீங்கள்தான் என்பது இன்னமும் துக்கமாயிருக்கிறது.

கண்டிப்பாய் அவளுக்கு வாங்கிக் கொடுப்பேன்! ஆனால் அதற்கு என்னுடைய எழுத்து காரணமாகயிராது என்பதுதான் கொடுமை!எல்லாரும் சிரிக்கிறாங்கன்னு உக்காந்து எழுதுறியே? கடசில பிச்சதான் எடுப்ப? என்று என் அம்மா சொன்ன வார்த்தைகள் பலித்துப் போனது. இப்போதும் என்னைப் பார்த்துத்தான் நீங்கள் சிரிக்க வேண்டுமா? இது புலம்பல் பதிவல்ல நண்பர்களே! நம்பினவர்களை ஏமாற்றாதீர்கள்! இந்த விஷயத்தையும் என்னால் இடதுகையால் கையாண்டிருக்க முடியும்! பாவம் பார்த்து விடுகிறேன்! இனி உங்கள் பதிப்பகத்துக்கும் எனக்கு எந்தவித சம்பந்தமுமில்லை! என்னுடைய புத்தகங்களை இனிமேல் நீங்கள் பதிப்பிக்க வேண்டாம்! என்னுடைய தொடர்பு எண்ணையும் நீங்கள் அழித்து விடுங்கள்!

என்னை மிதித்தால் என்னால் தாங்கிக் கொள்ள முடியும்! ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத பாவப்பட்ட ஆத்துமா நான் என்பதும் அதற்காய் நான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்பதும் என்னை ஏமாற்றிய அறிவிலிகளுக்கு மாத்திரமே தெரியும்! ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன் நண்பர்களே! உங்கள் பெயரையோ, பதிப்பகத்தின் பெயரையோ நான் சொல்லப் போவதில்லை! ஏனெனில் நீங்கள் என் சகோதரர்கள்! ஆனாலும் ,நீங்கள் இழந்தது ஒரு எழுத்தானையல்ல! உங்களை மிகவும் நம்பிய ஒரு அன்புச் சகோதரனை. வாழ்வோம்!”எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in