விதிமீறலில் ஈடுபட்டாரா மேயர்?: கேரளத்தை உலுக்கும் புதிய சர்ச்சை

மேயர் ஆர்யா ராஜேந்திரன்
மேயர் ஆர்யா ராஜேந்திரன்

கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே மேயர் ஆக்கப்பட்டவர். மேயர் ஆர்யா ராஜேந்திரன் மாநகராட்சியின் தற்காலிக ஊழியர்கள் நியமனத்தில் விதிகளை மீறி, மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து கடிதம் எழுதியதாக சர்ச்சை வெடித்துள்ளது.

அந்தக் கடிதம்
அந்தக் கடிதம்

கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் வசம் உள்ளது. இங்கு இந்தியாவிலேயே மிக இளைய வயதில் மேயரான ஆர்யா ராஜேந்திரன் மேயராக உள்ளார். மாநகராட்சி தினக்கூலி அடிப்படையில் சுகாதாரத்துறையில் பல்வேறு பணிகளுக்கு மொத்தமாக 295 நபர்களை பணி அமர்த்துவதாக அறிவித்துள்ளது. ஒருபக்கம் பொதுவெளியில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு, இதற்கு ஆள்களைத் தெரிவு செய்து பெயர் பட்டியல் தருமாறு திருவனந்தபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் அனவூர் நாகப்பனுக்கு, மேயர் ஆர்யா ராஜேந்திரன் எழுதியதாக ஒரு கடிதம் சுற்றுகிறது.

அதில், “மாநகராட்சி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு ஆள்கள் எடுக்க முடிவுசெய்துள்ளது. ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். முன்னுரிமைப் பட்டியலை வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.”எனக் கூறப்பட்டுள்ளது. இதையே முன்வைத்து இளைஞர் காங்கிரஸார், விதிமீறலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் மேயர் ஆர்யா ராஜேந்திரன் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுப்புகின்றனர்.

"கேரளத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் மட்டுமல்லாது அனைத்து அரசு, பொது நிறுவனங்களிலும் மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர்கள் கொடுக்கும் பட்டியல்படியே வேலை கொடுக்கிறார்கள். முதலில் தற்காலிகமாக ஆள் எடுத்துவிட்டு, நிரந்தரம் செய்துவிடுகிறார்கள்" எனக் குற்றம் சாட்டுகிறார் கேரள சட்டசபை எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன்.

காங்கிரஸ் இவ்வளவு கடுமையான எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்விவகாரம் குறித்து மேயர் ஆர்யா ராஜேந்திரன் தான் இப்படியான கடிதம் எழுதும் தேவை இல்லை. நான் டெல்லியில் இருந்தே இப்போதுதான் வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். மாவட்ட செயலாளர் அனவூர் நாகப்பனும் தனக்கு அப்படி எந்தக் கடிதமும் வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அது போலியான கடிதம் என இடதுசாரிகளும், மேயர் எழுதிய கடிதம் தான் என காங்கிரஸாரும் சமூகவலைதளங்களில் சண்டையிட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in