சென்னையில் கேன் தண்ணீர் தரமான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைச் செய்யப்படுகிறதா என்பதை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், ‘’ கேன் தண்ணீர் அதிகளவில் மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சென்னையில் வசிக்கும் மக்கள் கேன் தண்ணீரை மட்டுமே குடிநீராகப் பயன்படுத்தி வரும் நிலையில் அதனை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
பல இடங்களில் குடிநீர் கேன்களில் தண்ணீர் தரமானதாக இல்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். புழுக்கள் இருப்பதாக வேதனைத் தெரிவிக்கிறார்கள் அதனால் உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் கேன் தண்ணீர் தரமாகத் தாயாரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல மார்க்கெட் பகுதிகளில் விற்பனைச் செய்யப்படும் பழங்கள் தரமாக உள்ளதாக என்பதை அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
பல இடங்களில் பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுவதாகப் புகார் வருகிறது அதனையும் அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடைக்காலம் என்பதால் அதிக அளவில் குளிர்பான விற்பனை நடைபெறுகிறது அவைத் தரமானதாக உள்ளதா என்பதனையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்’’என்றார்.