பொது சரக்கு, சேவை வரி எதிர்ப்பு சரியா?

பொது சரக்கு, சேவை வரி எதிர்ப்பு சரியா?

பொட்டலத்தில் அடைக்கப்பட்டு - ஆனால் பிராண்டு பெயர் இல்லாமல் விற்கும் சில பொருட்கள் மீது 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சிகளிடமிருந்தும் சில வர்த்தக அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்பு காணப்படுகிறது.

பொதுவாக எந்தப் பொருள் மீதும் வரியைப் புதிதாக விதிப்பதும், வரி விகிதத்தை அதிகரிப்பதும் மக்களுடைய நலனுக்கு உகந்தது அல்ல. ஆனால் இந்த உயர்வு ஜிஎஸ்டி பேராயத்தால் (கவுன்சில்) பரிசீலிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு. இதில் மத்திய நிதியமைச்சர், மாநில நிதியமைச்சர்கள் அனைவரும் இடம்பெறுகின்றனர். இந்தப் பேராயத்தில் (கவுன்சில்) பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்கு அடிப்படையில் அல்லாமல், கருத்தொற்றுமை அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்தப் பேராயத்தில் ஒன்றிய அரசில் இடம் பெற்றுள்ள ஆளும் கட்சி, அதன் தோழமைக் கட்சிகள் மட்டுமல்லாமல் பிற கட்சிகளும் இடம்பெறுகின்றன.

அரசியல்வாதிகள் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ‘நிர்வாக நலன்’ கருதி முடிவெடுப்பதும், எதிர்க்கட்சிகளான பிறகு ‘மக்களுடைய நலன்’ மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதும் புதிதல்ல. காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருந்து பாஜக எதிர்க்கட்சியாக இருந்திருந்தாலும் இந்த எதிர்ப்பு நிச்சயம் இருக்கும். எனவே இதன் பின்னால் உள்ள அரசியல் வழக்கமானது.

ஆனால் இந்த உயர்வுக்குக் காரணம் அரசு நியமித்த பணிக் குழுக்கள் வரி ஏய்ப்பு குறித்து திரட்டிய தரவுகளின் அடிப்படையிலேயே, பிராண்டு பெயர் இல்லாமல் பொட்டலமாகக் கட்டி விற்கப்படும் பண்டங்களுக்கும் வரியை விதித்திருக்கிறது. இதைச் செய்வது பெரிய உற்பத்தி நிறுவனங்கள் என்பது அதிகம் அறியப்படாத தகவல். மக்களுடைய பொருளாதாரச் சுமைகளுக்கு இடையில், இந்த விகிதம் மிகக் குறைவாக இருந்தாலும் அதைத் தாங்க முடியாது என்பதும் ஏற்கக் கூடிய கருத்துதான். ஆனால் அரசின் சில விதிவிலக்குகளை வியாபாரிகள் தங்களுக்குச் சாதகமாக வளைத்து வரி ஏய்ப்பு செய்யும்போது அதைத் தடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.

இந்தப் பொருட்களை வாங்கும் அனைவருமே - குறிப்பாக ஏழைகள் பொட்டலத்தில் கட்டிய பண்டங்களைத்தான் வாங்குகிறார்கள் என்றால் எதிர்ப்பு நியாயமே. அடுத்தது இந்த வரிவிதிப்பால் விற்பனையாளர்களுக்கு உதவியாக, உள்ளீட்டு வரி கணக்கிடப்படும். இது அவர்கள் அந்தத் தொகையைத் திரும்பப் பெறவும் வழியேற்படும். அதைவிட முக்கியம் பிராண்டு பெயரில் இல்லாமல் பொட்டலமாக விற்கப்படும் பண்டங்களின் அளவும், தொகை மதிப்பும் கணக்கில் வரும்.

உலகளாவிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்க்கட்சிகள் உள்பட அனைவரும் அறிந்ததே. எல்லா நாடுகளுமே தங்களுடைய வருவாயைப் பெருக்கவும் செலவைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. வேளாண்மை, தொழிலுற்பத்தி, சேவைத்துறை ஆகியவை நம் நாட்டில் வலுவாக இருந்தாலும் சீன – பாகிஸ்தான் நாடுகளின் முறைப்பு காரணமாக, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு உடனடியாக அதிகம் செலவிட்டாக வேண்டிய அவசியம் இருக்கிறது. இரண்டாண்டுகளாக கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக மக்கள் தங்களுடைய வருவாய், வேலை இரண்டையும் இழந்ததைப் போல அரசும் வருவாயை இழந்தது. அதை ஈடுகட்ட வரிகளை உயர்த்த முடியாமலும் புதிய வரிகளை விதிக்க முடியாமலும் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. பெட்ரோல் - டீசல் பயன்பாடு அதிகரிப்பதுடன் இறக்குமதிச் செலவும் அதிகரித்து வரும்போது, சில ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கூட அரசுக்கு இப்போது இழக்க முடியாத வருவாயாக இருக்கிறது. அரசியல் கட்சிகள் எதிர்ப்பதை பொறுப்பற்ற செயல் என்று தள்ளிவிட முடியாது. அரசு அவர்களுடைய கோரிக்கைகளையும் பரிசீலித்து இந்த வரியுயர்வைக் குறைப்பது நல்ல நடவடிக்கையாக அமையும்.

அதே சமயம் எதிர்க்கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பு யாருக்குச் சாதகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய வேண்டும். பொது சரக்கு சேவை வரியை அறிமுகப்படுத்தும்போது ஏழைகளும் பெரும்பாலான மக்களும் வாங்கிப் பயன்படுத்தும் கோதுமை, அரிசி,பார்லி, ஓட்ஸ், சர்க்கரை, வெல்லம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பண்டங்களுக்கும் சேவைகளுக்கும் முழு வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதை மறந்துவிடக் கூடாது. எனவே சில பண்டங்களுக்கு வரி விதிப்பதையும் வரி விகிதத்தை உயர்த்துவதையும் விருப்பு வெறுப்பில்லாமல் ஆராய்வது அவசியம்.

‘மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கிரைண்டர்கள் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது’ என்று ஒரு அரசியல் கட்சி கண்டனம் தெரிவித்திருக்கிறது. உண்மைதான், மக்கள் கிரைண்டர்களை அன்றாடம் பயன்படுத்துகின்றனர், ஆனால் அன்றாடம் வாங்குவதில்லை. நல்ல முறையில் பராமரித்தால் குறைந்தபட்சம் மூன்றாண்டுகளுக்கு உழைக்கும் அளவில் தரமுள்ள சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய விமர்சனங்கள் அரசியல் ரீதியாக ஆதரவைப் பெறக்கூடும், பொருளாதார நோக்கில் சரியா என்பது முக்கியமான கேள்வி.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்துக்கே வராதவை அல்லது இனிவரும் வாய்ப்புகள் குறைவானவை. நாடாளுமன்றத்தை முடக்குவதற்குப் பதிலாக எதிர்க் கட்சிகள் தங்களுடைய வாதத்தை முறையான விவாதங்கள் மூலம் வெளிப்படுத்த வேண்டும். மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்குத்தான் நாடாளுமன்றம். எதிர்க் கட்சிகள் தங்களுடைய செயல்களால் தவறான முன்னுதாரணங்களையே தொடர்ந்து ஏற்படுத்துகின்றன. எதிர்காலத்தில் மக்கள் நம்மை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதைப்போல செயல்படுவது நல்லதல்ல. எந்தக் கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்றுவிட முடியாது. எதிர்க் கட்சிகள் மக்களை அணுகி தங்களுடைய எதிர்ப்புகளின் நியாயத்தை எடுத்துச் சொல்லி, மாற்று திட்டங்களை முன்வைத்து மக்களுடைய ஆதரவைப் பெறும் ஆக்கப்பூர்வ வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அரசும் இந்த வரி உயர்வில் ஒரு முறைகேட்டுக்கு இடம் தந்திருக்கிறது. அதை யாரும் பெரிதுபடுத்தாததும் வியப்பாக இருக்கிறது. மாவு, பருப்பு, சிறுதானியங்கள் போன்றவற்றை 25 கிலோ எடையுள்ள பொட்டலங்களாக அல்லது சிறு மூட்டைகளாக அடைத்து விற்றால் ஜிஎஸ்டி வரி உண்டு. ஆனால் அதே பொருட்களை 25 கிலோ எடைக்கும் மேல் அடைத்து விற்றால் வரி கிடையாது! 25 கிலோவுக்கு மேல் மூட்டை அல்லது பொட்டலமாக கட்டிவிட்டு அப்படியே தான் விற்க வேண்டும் என்றில்லை, அதை சில்லறையில் விற்றாலும் வரி கிடையாது! இந்தச் சலுகை ஏன், யாருக்காக என்ற கேள்வி எழுகிறது. ஜிஎஸ்டி வரி நிர்வாகத்தில் அதிகாரிகள் தரப்பு சொல்வதை மட்டுமே அதிகம் கேட்காமல் சந்தைக்கு சென்று நேரடியாக ஆய்வுகள் நடத்துவதும் நுகர்வோர் அமைப்புகளுடன் ஆலோசனை கலப்பதும் அரசுக்கு நல்லது.

பெரும்பாலான உழைக்கும் மக்கள் செலுத்தும் மறைமுக வரிகள்தான் அரசுக்கு நிரந்தர வருமானமாக இருக்கிறது. நேர்முக வரிகளில் ஊதியத்தை மறைக்க முடியாத நடுத்தர வர்க்கம், நிரந்தரச் சம்பளக்காரர்கள்தான் அதிகம் பலிகடாவாகின்றனர். சொந்தமாக வீடு, கார், தோட்டம், நிலபுலம் எல்லாம் இருந்தும் நயா பைசா கூட வருமான வரி செலுத்தாமல் வாழ்க்கையை அனுபவிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அரசு அவர்கள் மீது கவனம் செலுத்தினால் நல்லது.

விவசாயத்திலிருந்து பெறப்படும் வருமானத்துக்கு முழு வரி விலக்கு என்பதை மாற்றி, வேறு இனங்கள் மூலமும் அவர்களுக்கு வருமானம் கிடைக்கும்போது விவசாய வருமானத்தையும் அத்துடன் சேர்ப்பது அரசுக்கு வருவாயைப் பெருக்க உதவும். ஆண்டுக்கு நாற்பது லட்சம் ரூபாய் வரை விற்றுமுதல் உள்ள வியாபாரிகள் ஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து விலக்கு பெறுகின்றனர். அவர்கள் கணக்கும் காட்ட வேண்டியதில்லை. சேவைத்துறையிலும் இதே போல விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

எனவே சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள், ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற பொதுவான வாசகங்கள், வரி ஏய்ப்பவர்களுக்குச் சாதகமாக இல்லாமல் பார்த்துக்கொள்வது அனைவரின் கடமை. வரி ஏய்ப்பாளர்களால் ஏற்படும் வருவாய் இழப்புச் சுமை அந்த ஏழைகள் மீதே மறைமுக வரியாக மேலும் அதிகமாகும் என்பதே உண்மை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in