
காய்ச்சல் பரவல் காரணமாக புதுச்சேரியில் 8-ம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அதற்கான தேவை இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’ மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் வகையில் சிறப்பு திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்கான தீர்வுகள் ஆராயப்படும்.
ஐஐடியில் நடந்த தற்கொலைகள் குறித்து அதன் இயக்குநர் காமகோடி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தற்கொலை என்பது எதற்குமே தீர்வாகாது என்பதை மாணவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். மாணவர்களிடையே தற்கொலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மூன்று நாட்களில் சரியாகி விடுகிறார்கள். அதனால் பதற்றமோ, பயப்படவோ தேவையில்லை. காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் தமிழகத்தில் இல்லை ‘’ என்றார்.