‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் ஆயுதப் பற்றாக்குறையா? - அதிர்ச்சியளிக்கும் அறிக்கை

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால் ஆயுதப் பற்றாக்குறையா? - அதிர்ச்சியளிக்கும் அறிக்கை

உள்நாட்டிலேயே தயாராகும் தளவாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர் மோடியின் முடிவால், இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவற்றில் பற்றாக்குறை ஏற்படும் என ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக சீனா, பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் நிலையில், இப்படியான சூழல் உருவாவது ஆபத்தானது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதன் பின்னணி என்ன?

2014 மக்களவைத் தேர்தலில் வென்று பிரதமரான சில மாதங்களிலேயே ’மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்படி செல்போன் தொடங்கி போர் விமானம் வரை அனைத்தையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது என்றும், அதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும்; அந்நியச் செலாவணி வெளியேறுவதைக் குறைக்க முடியும் என்றும் அவர் உறுதியளித்தார். உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் முன்னணி நாடு இந்தியா. ஆனால், மோடி அரசு ஆயுத இறக்குமதியைக் குறைக்கும் வகையில் விதிமுறைகளைக் கொண்டுவந்தது.

குறிப்பாக, தளவாட உற்பத்தியில் உள்நாட்டில் தயாரான பொருட்களே 30 சதவீதம் முதல் 60 சதவீதம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மோடி அரசு நிபந்தனை விதித்தது. இதற்கு முன் இப்படியெல்லாம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்பதால் உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டதாகச் சொல்கிறது ப்ளூம்பெர்க் செய்தி அறிக்கை.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவற்றின் ஆயுட்காலம் அடுத்த சில ஆண்டுகளில் முடிவடையவிருக்கும் நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் புதிய தளவாடங்கள் இல்லாதது மிகப் பெரிய பிரச்சினையாகலாம் என்பதுதான் இந்த அறிக்கையின் முக்கிய சாராம்சம்.

ஏற்கெனவே எல்லையில் சீனாவும் பாகிஸ்தானும் தொந்தரவு கொடுத்துவரும் நிலையில், இப்படி ஒரு சூழல் உருவாவது குறித்து கவலை எழுந்திருக்கிறது. குறிப்பாக, விமானப் படை பலவீனமாகிவிட்டால் எல்லையில் சீனா நிகழ்த்தும் அத்துமீறல்களை எதிர்கொள்ள தரைப்படைகளை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டிவரும்.

தளவாட உற்பத்திக்கு உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதை ராணுவம் அதிகரித்துவிட்ட நிலையில், மிகவும் நுட்பமான தொழில்நுட்பம் கொண்ட டீசல் - மின்சார நீர்மூழ்கிக் கப்பல்கள், இரட்டை இன்ஜின் கொண்ட போர் விமானங்கள் போன்றவை இதுவரை உற்பத்திசெய்யப்படவில்லை. ஹெலிகாப்டர் விஷயத்திலும் கிட்டத்தட்ட இதேபோன்ற நிலை.

இரட்டை இன்ஜின் கொண்ட போர் விமானங்கள் உற்பத்தி செய்யப்படாதது ஒருபக்கம் என்றால், கையிருப்பில் உள்ள ஒற்றை இன்ஜின் ஹெலிகாப்டர்களில் பெரும்பாலானவை 2026-ல் நிரந்தரமாகத் தரையிறக்கப்படும் நிலையில் இருப்பவை. அது மட்டுமல்ல 2030-ம் ஆண்டுக்குள் இலகுரக ஹெலிகாப்டர்கள் தயாராவதற்கான சூழல் இல்லை. பழைய ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்குவதால், 2017 முதல் கடந்த டிசம்பர் வரை 31 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக நாடாளுமன்றத்தின் தரவுகள் மூலம் தெரியவந்திருக்கிறது.

நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் டோர்பெடோஸ் எனப்படும் நீர்மூழ்கிக் குண்டு போன்றவற்றின் தயாரிப்பில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஈடுபட்டிருக்கிறது. ஆனால், அவை எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதற்குக் கால நிர்ணயம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“உள்நாட்டிலேயே உலகத்தரமான ஆயுதங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் அதற்குப் பெரும் செலவு செய்ய வேண்டியிருக்கும்; அதிக கால அவகாசம் தேவைப்படும்” என பாதுகாப்புத் துறை குறித்த சுயாதீன ஆராய்ச்சியாளர் ராகுல் பேடி கூறியதாக ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்த தகவல்களைப் பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் அதிகாரிகளிடமிருந்து திரட்டியதாகச் சொல்கிறது ப்ளூம்பெர்க். இதுகுறித்து விசாரிப்பதற்காக அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்குப் பாதுகாப்புத் துறை இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் அந்நிறுவனத்தின் இணையதளம் தெரிவிக்கிறது.

பழையதாகிக்கொண்டிருக்கும் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுக்கு மாற்றாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாமல் தரைப்படை, விமானப் படை, கடற்படை என முப்படைகளும் இருப்பது ஆபத்தானது என அந்த அதிகாரிகள் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in