
கிராம உதவியாளர் நியமனங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாவிட்டால் ரத்து செய்யப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், கன்னிமார் கோட்டம் பகுதியைச் சேர்ந்த முத்துமாரியம்மாள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். என் கணவர் 2014-ல் இறந்தார். விளாத்திக்குளம் தாலுகாவில் 17 கிராம உதவியாளர் நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டது. நான் பட்டியலினப் பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட சூரன்குடி கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். ஆனால், அங்கு எம்பிசி பிரிவைச் சேர்ந்த அருண்குமார் தேர்வு செய்யப்பட்டார். நான் சூரன்குடியிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கிறேன். அருண்குமார் 35 கிமீட்டர் தூரத்தில் வசிக்கிறார்.
கிராம உதவியாளர் பணிக்கு உள்ளூர் கிராம மக்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. இந்த விதிக்குப் புறம்பாக கிராம உதவியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து விளாத்திக்குளம் வட்டாட்சியரிடம் புகார் அளித்தேன். அவர் அருண்குமாருக்குப் பதிலாக ரோகினி என்பவரை கிராம உதவியாளராக நியமித்தார். அவர் 33 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் வசிக்கிறார். எனவே விதிமுறைக்கு புறம்பாக நடைபெற்ற கிராம உதவியாளர் தேர்வை ரத்து செய்து, சூரன்குடி கிராம உதவியாளராக என்னை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேல்மந்தை கிராமத்தைச் சேர்ந்த செல்வசகுந்தலா தாக்கல் செய்த மனுவில், ‘நான் பிசி கிறிஸ்தவ நாடார் பிரிவைச் சேர்நதவர். மேல்மந்தை கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். ஆனால், 12 கிலோ மீட்டருக்கு அப்பால் வசிக்கும் மனோஜ் என்பவர் கிராம உதவியாளராக நியமிக்கப்பட்டார். இதுகுறித்து வட்டாட்சியரிடம் புகார் அளித்தேன். அதன் பிறகு குற்றாலீஸ்வரி என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் மேல்மந்தையில் இருந்து 46 கிலோ மீட்டருக்கு அப்பால் வசிக்கின்றார். அவரது நியமனத்தை ரத்து செய்து என்னை மேல்மந்தை கிராம உதவியாளராக நியமிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கூறியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் திருமுருகன் வாதிட்டார். பின்னர், ''விளாத்திகுளம் தாலுகாவில் கிராம உதவியாளர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விதிமீறல் இருந்தால் கிராம உதவியாளர் நியமனங்கள் ரத்து செய்யப்படும்'' என்று கூறி விசாரணையை இரண்டு வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.